விஜய் சேதுபதி சமீப காலமாக பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. கடந்த சில வருடங்களாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். ஆனால் அவர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்கள் சரியாக ஓடுவதில்லை. எனினும் அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் மாஸ் ஹிட் ஆகிறது. உதாரணங்களாக “மாஸ்டர்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்களை கூறலாம்.

இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் மாஸ் ஹிட் ஆன ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிசா விஜயன், லைலா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சர்தார்”. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
“சர்தார்” திரைப்படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து “சர்தார் 2” திரைப்படம் உருவாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. இந்த நிலையில் “சர்தார் 2” திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார். பாலிவுட்டில் “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கார்”, “ஜவான்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, “காந்தி டாக்ஸ்” என்ற மௌன திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழில் தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





