நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி ரியாலிடி ஷோவில் காம்பியராக இருந்தவர். பிறகு மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 12 ஆண்டுகளில் அவர் 22 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது 3 படங்கள் பிராசஸில் உள்ளது.
இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், அடுத்ததாக குட்நைட் படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
கடந்தாண்டில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அவரது இமேஜ் தமிழ் சினிமாவில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. உச்சத்தில் உள்ள நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால் இனி அவரது இடத்தை தமிழ் சினிமாவில் அடுத்து பிடிக்கப் போவது சிவகார்த்திகேயன்தான் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
இதற்கேற்ப விஜய் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான தி கோட் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். அதில் விஜயுடன் அவர் சேர்ந்து நடித்த நிலையில், துப்பாக்கியை பிடிங்க சிவா என்று விஜய் பேசிய டயலாக் மூலம், இனி என் இடத்தில் நீதான் என விஜயே சூசகமாக சொல்லிவிட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஏனெனில் நடிகர் விஜய் நடித்த பல படங்களில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படமாகும். அதனால் தனது புகழ் மிக்க படத்தின் டைட்டிலை சொல்லி விஜயே சிவகார்த்திகேயனுக்கு முன்னுரிமை தந்துவிட்டார் என்றும் இணையத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இப்போது விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் நிலையில், அதே நாளில் போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ரிலீஸாவது பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு தெரியாமல் நடந்திருக்காது, விஜய்க்கு போட்டியாக களத்தில் இறங்குவதை அவர் கட்டாயம் தவிர்த்திருக்க வேண்டும். விஜயின் கடைசி படம்தானே, ஒருமுறை மோதி ஒரு கை பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு எஸ்கே வந்துவிட்டாரா, என தளபதி ரசிகர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.





