நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனம் சார்பில் புதிய படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. யாருமே எதிர்பாராத நேரத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அறிவிப்பு வெளியானது. ஜேசன் சஞ்சய், ஆரம்பத்திலிருந்து இயக்குனர் ஆவதற்கு தான் முயற்சி செய்து வந்தார். இதற்காக லண்டன் சென்று அவர் திரைப்படம் மற்றும் திரைக்கதை எழுதுவது தொடர்பாக கல்வி பயின்றார்.
தொடர்ந்து, சில குறும்படங்களையும் சஞ்சய் இயக்கியுள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு முதன்முறையாக வெள்ளித்திரையில் தோன்றினார். தனது தந்தை விஜயுடன் அவர் நடனம் ஆடியது பலரையும் கவர்ந்தது.
இதை எடுத்து நிச்சயம் சஞ்சய் தமிழ்த் திரையில் நடிகராக தான் வருவார் என பலரும் ஆருடம் தெரிவித்து வந்தனர். விஜய்யும் அதற்காகவே காய் நகர்த்தியதாக தகவல் வெளியானது. இதற்காக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் அவர் பேசியதாகவும், தனது மகனுக்கு ஏற்ற கதையை கூறுமாறு அவர் தெரிவித்ததாகவும் திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் விஜய் மகனுக்கு என தனியாக ஒரு கதையை தயார் செய்து கொண்டு வர, அது நடிகருக்கும் பிடித்துப் போனதாம். ஆனால் சஞ்சய் இதனை திட்டவட்டமாக மறுக்க, அவர் போக்கிலேயே போகச் சொல்லி விட்டதாக சினிமா விமர்சர்கள் சிலர் கூறி வந்தனர்.
இப்படியான சூழலில் தான் இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் ஜேசன் சஞ்சய். இவர் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே அதன் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல் அவர் இயக்கத்தில் யார் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்ற பேச்சுக்களும் என ஆரம்பித்தன. ஏற்கனவே தன்னை விஜய் சேதுபதி ரசிகன் என்று அவர் கூறியிருப்பதால் இந்த படத்தில் அவர் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வளர்ந்து வரும் நடிகர்களே படத்தில் இடம்பெற இருப்பதாகவும், அதர்வா, கவின், அல்லது துருவ் விக்ரம் ஆகியோரில் ஒருவர் படத்தில் கதாநாயகனாக நடிக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது சஞ்சய் இயக்கம் படத்தில் கதாநாயகனாக மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு பேச்சு அடிபட்டுள்ளது. இதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாருமே எதிர்பார்க்காத வகையில் வெளியாகி இருக்கும் இந்த தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.





