- Advertisement -
Homeபொழுதுபோக்குநடுவழியில் ரயிலை நிறுத்தச் சொன்ன கேப்டன், நள்ளிரவில் இறங்கி ஓடிய நெப்போலியன் - விஜயகாந்த் மறைவுக்கு...

நடுவழியில் ரயிலை நிறுத்தச் சொன்ன கேப்டன், நள்ளிரவில் இறங்கி ஓடிய நெப்போலியன் – விஜயகாந்த் மறைவுக்கு பின் அமெரிக்காவில் இருந்து கிடைத்த அந்த தகவல்!

- Advertisement -

நடிகர் நெப்போலியன், தமிழ் சினிமாவில் ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர். புதுநெல்லு புதுநாத்து, விருமாண்டி, சுயம்வரம், எட்டுப்பட்டி ராசா, தசாவதாரம், எஜமான் என பல படங்களில் தனது நடிப்பில் தனித்துவம் காட்டியவர். இப்போது அமெரிக்காவில் செட்டிலாகி குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் மறைந்தார். நேற்று மாலை, அவரது உடல் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அமொிக்காவில் இருந்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் நெப்போலியன் விஜயகாந்த் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த போது நடந்த சம்பவம் இது. கார்கில் போர் அப்போது நடந்திருந்தது. அதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கார்கில் நிதி திரட்ட மதுரையில் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தினோம். தலைவர் விஜயகாந்த் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். நான் அப்போது நானும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தேன்.

அந்த கலைநிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகையர், துணை நடிகர்கள், என 200 பேர் வரை கலந்துக்கொண்டோம். மதுரையில் கலைநிகழ்ச்சி முடிய இரவு 11 மணிக்கு ஆகி விட்டது. ரயிலுக்கு நேரமானதால் நேராக ரயில்வே ஸ்டேஷன் வந்து அனைவரும் ரயில் ஏறி விட்டோம். ஆனால் யாருமே சாப்பிடவில்லை. சாப்பிட நேரமில்லை.

- Advertisement -

இதனால் வருத்தப்பட்ட கேப்டன் விஜயகாந்த், கார்கில் நிதி திரட்ட சம்பளமின்றி சங்கத்துக்காக அனைவரும் வந்து கலைநிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். அவர்கள் பசியோடு இருக்க கூடாது. அடுத்த ஒரு மணி நேரத்தில் கொடை ரோடு வரும். அங்கு இரவு நேர ஓட்டல்கள் நிறைய இருக்கும். நீங்கள் ரயில் நின்றவுடன், என்ஜின் டிரைவரிடம் பேசி 10 நிமிடம் மட்டும் ரயிலை நிறுத்தி வையுங்கள். நான் அதற்குள் அனைவருக்கும் டிபன் வாங்கி வந்துவிடுகிறேன் என்றார்.

அதன்படி ரயில் நின்றவுடன், அந்த நள்ளிரவில் நான் வேக வேகமாக ஓடிப்போய் ரயில் இன்ஜின் டிரைவரிடம் பேசி, விவரத்தை சொல்லி, 10 நிமிடங்கள் வரை ரயிலை நிறுத்த வைத்தேன். அதற்குள் அங்கிருந்த ஓட்டல்களுக்கு போய் இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, சட்னி, சாம்பார், குருமா என அனைத்தையும் மூட்டை மூட்டையாக வாங்கி வந்துவிட்டார் விஜயகாந்த். பசியோடு இருந்த அனைவரும் அதை ஆர்வமாக சாப்பிட்டனர். அவர்கள் பசியாறிய பின்புதான் விஜயகாந்த் நிம்மதியானார் எனக் கூறியுள்ளார் நடிகர் நெப்போலியன்.

- Advertisement -

சற்று முன்