தமிழ் சினிமாவில் திரைக்கதை வசனகர்த்தாவாக பல படங்களில் பணிசெய்தவர் கருணாநிதி. அவரது வாழ்க்கையில் அரசியல், சினிமா என இரண்டையுமே பிரித்துப் பார்க்க முடியாது. அந்தளவுக்கு அரசியல் மீதும், சினிமா மீதும் ஆர்வமும், பிடிப்பும் கொண்டவர். 80 வயதுகளை கடந்த நிலையிலும், சினிமா விழாக்களில் தவறாமல் பங்கேற்றவர் கருணாநிதி.
எனவே, அவரது நூற்றாண்டை கொண்டாடும் விதமாக இன்று சென்னையில், சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் 100 விழா நடத்தப்படுகிறது, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நடத்தும் இந்த விழாவில் பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞரின் தசாவதாரம் என்ற பெயரில் கேஎஸ் ரவிக்குமாரின் குறுநாடகம் ஒன்று இடம்பெறுகிறது. இதில் கருணாநிதி கேரக்டரில் கேஎஸ் ரவிக்குமாரும், அண்ணாத்துரை கேரக்டரில் ரமேஷ் கண்ணாவும் நடிக்க உள்ளனர். மற்றொரு நாடகத்தில் கோவை சரளா, தம்பி ராமையாக உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். நடிகர் தனுஷ், கருணாநிதி குறித்து அவரே எழுதிய ஒரு பாடலை மேடையில் பாட உள்ளார்.
இதுதவிர ஸ்டண்ட் நடிகர்களில் லைவ் பெர்பாமென்ஸ் நிகழ்ச்சி, நடிகர் நடிகைகளில் ஆடல் பாடல் நடனநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கருணாநிதி குறித்த ஆவணப்படம் ஒன்றும் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.
இந்த விழாவை பொருத்தவரை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கருணாநிதியின் தீவிர அபிமானியான சத்யராஜ், வைரமுத்து, பிரபு, சிவக்குமார், பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் கட்டாயம் பங்கேற்க உள்ளனர். தவிர தமிழக அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகளும் விழாவில் கலந்துக்கொள்கின்றனர்.
அஜீத்குமார் துபாயில் இருப்பதால், அவர் விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை. விஜய் சென்னையில் இருப்பதால் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளது. ஆனால் அரசியல் களத்தில் அவர் குதிக்க இருப்பதால், அதுவும் கேள்விக்குறியாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரான விஷால், வெளிநாட்டில் இருந்துக்கொண்டு சென்னை வராமல் இருக்கிறார். இந்த விழா முடிந்த பின்தான் அவர் வருவார். ஏனெனில் அவருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் சில பிணக்குகள் இருப்பதால் அவர் வராமல் தவிர்க்கிறார் என்றும் தகவல் வைரலாகி வருகிறது.





