கோலிவுட்டில் யதார்த்தமாக தனது நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களை பட்டியலிட்டு பார்த்தால், அதில் விஜய் சேதுபதி முக்கியமானவராக இருப்பார். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, சுந்தர பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் தனக்கு கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.
அங்கிருந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என விஜய் சேதுபதி தொட்ட படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க, அடுத்தடுத்த உயரங்களுக்கு அவர் சென்றார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் விஜய் சேதுபதி நடித்த பல திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன.
ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தில் தொடங்கி, சமீபத்தில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் வரை பல படங்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போக, அவ்வபோது சில வெற்றி படங்களை கொடுத்து தனது இருப்பையும் தக்க வைத்துக் கொண்டார். இந்த நிலையில், கதாநாயகன் இன்னும் தன்னைச் சுற்றிய கட்டமைப்பை உடைத்து வில்லன் கேரக்டருக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார் விஜய் சேதுபதி.
அவரது இந்த யுக்தி, விக்ரம் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் மிகச் சரியாக கிளிக் ஆனது. அதுமட்டுமில்லாமல் தமிழ் திரை உலகத்தையும் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். அவரும் கத்ரீனா கைஃபூம் இணைந்து நடித்திருக்கும் மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகிறது.
இப்படி இருக்க, கதாநாயகனாக அறிமுகமான சில ஆண்டுகளிலேயே அவர் தனது ஐம்பதாவது படத்தை நெருங்கி இருக்கிறார். குரங்கு பொம்மை என்னும் திரைப்படத்தை இயக்கிய நிதிலன் இதனை இயக்குகிறார். மகாராஜா என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டு வேடங்களாம். அது மட்டுமல்லாமல் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் இதில் நடிக்கிறாராம்.
இந்தப் படத்திற்கு பிறகு மிஷ்கினுடன் கைகோர்க்கிறார் விஜய் சேதுபதி. டார்க் திரில்லராக உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்குகிறதாம். இந்தப் படத்திற்கு ட்ரெயின் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் படத்திற்கு, ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளாராம். எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்த்து கதையை எடுக்கும் மிஷ்கினுடன், விஜய் சேதுபதி இணைந்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.





