விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான தங்கலான் திரைப்படம் அந்தளவு சிறப்பாக செல்லவில்லை. பா ரஞ்சித் இயக்கத்தில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாதி நன்றாகவே இல்லை என்றும், குறிப்பாக படத்தின் வசனங்கள் புரியவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
தங்கலான் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக, இயக்குனர் அருண்குமாருடன் கைகோர்த்தார். இவருக்கு கடைசியாக வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கொடூரங்களை தோலுரித்துக் காட்டிய இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.
இப்படியான சூழலில் தான் அவரது கதையில் நடிக்க விக்ரம் சம்மதித்தார். ஏற்கனவே விக்ரமை ஒரு முறை சந்தித்து கதை கூறி இருப்பதாக அருண்குமார் தெரிவித்து இருந்தார். அப்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து எடுத்த, சிந்துபாத் திரைப்படத்தின் கதையைத்தான் விக்ரமிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் கதையை கேட்ட விக்ரம் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். முதல் பாதி மட்டுமே நன்றாக உள்ளது என்றும் அவர் கூறியிருந்தாராம். இப்படியான சூழலில் தான் அந்த கதை விஜய் சேதுபதிக்கு சென்று இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விக்ரம் – அருண்குமார் கூட்டணி இணைந்து வீர தீர சூரன் திரைப்படத்தில் பயணித்துள்ளது.
முதலாவதாக இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நேரடியாக அருண்குமார் எடுத்திருக்கிறார். படத்தில் விக்ரம் கேங்ஸ்டர் ஆக வருகிறார். எஸ் ஜே சூர்யாவிற்கு காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மளிகை கடைக்காரனாக வரும் விக்ரம், முந்தைய காலத்தில் கேங்ஸ்டர் ஆக இருந்தது போன்று இந்த திரைப்படம் காட்டுகிறதாம். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
ஏற்கனவே இந்த திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் அது நடக்காத சூழ்நிலையில் தற்போது வரும் 27 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. 20 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





