ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வில்லன் கேரக்டரும் மிக முக்கியம். ஹீரோவுக்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து தொடர்ந்து நெருக்கடி தரும் வில்லனால்தான் ஹீரோவுக்கான சாதுர்யமும் திறமையும் வெளிப்படும். ஹீரோவை ரசிகர்கள் மிரட்சியாக பார்க்கிற பிரமிப்பு படத்தில் உருவாகும்.
பாட்ஷா முதல்வன் போன்ற படங்களின் அபார வெற்றிக்கு வில்லனாக நடித்த ரகுவரன் மிக முக்கியமான காரணமாக இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. பாட்ஷா படத்தில் வில்லனாக ரகுவரன் நடித்ததை ரஜினியே பாராட்டி இருந்தார். பாட்ஷா 2ம் பாகம் வெளிவராததற்கு முக்கிய காரணம் பாட்ஷா 2 படத்தில் நடிக்க ரகுவரன் போன்ற ஒரு அசாத்தியமான கலைஞன் இல்லை என்பதுதான்.
அதே போல் எம்ஜிஆருக்கு ஒரு வில்லன் என்றால் அது எம்என் நம்பியார், கமலுக்கு ஒரு சரியான வில்லன் என்றால் அது நாசர், விஜய் சூர்யா போன்றவர்களுக்கு பிரகாஷ் ராஜ் என்று வில்லன் நடிப்பால் பெயர் வாங்கிய பல நடிகர்கள் இருக்கின்றனர். இப்படி வில்லனாக வந்து ஹீரோவாக மாறிய நடிகர்கள் தான் சரத்குமார் சத்யராஜ் போன்றவர்கள்.
அந்த வகையில் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரதீப் ராவத். நடிகர் சிம்பு கோபிகா நடித்த தொட்டி ஜெயா படம் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் பிரதீப் ராவத். அதன் பிறகு சூர்யா நடித்த கஜினி படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இதில் அவர் இரட்டை வேதங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் நடித்த அசல் ஜில்லா வீரம் படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் வாத்தியார் ராஜபாட்டை ஆம்பள போன்ற பல படங்களில் அவர் வில்லனாக நடித்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத் தொடர் சிகிச்சைக்குப் பின்பு அதிலிருந்து மீண்டு வந்தார்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் நோய் பாதிப்பு தீவிரமடைந்தது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை நடிகர் பிரதீப் ராவத் மறைந்தார். அவரது மறைவு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





