நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து வருகிறார். திமிரு, சண்டக்கோழி, அவன் இவன், நான் சிவப்பு மனிதன், பாண்டிய நாடு, மார்க் ஆண்டனி போன்ற சில படங்கள் மட்டுமே, விஷாலுக்கு பெயர் சொல்லும்படியான படங்களாக அமைந்தன.
அதிலும் தொடர்ந்து சில ஆண்டுகளாக தோல்வி படங்களாக கொடுத்து பலத்த ஏமாற்றத்தில் இருந்த நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மார்க் ஆண்டனி அமைந்தது. சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் விஷாலுடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் போன்றவர்களும் நடித்திருந்தனர், இதில் விஷால் இரட்டை வேடம், எஸ்ஜே சூர்யாவும் இரட்டை வேடம் என்பது வித்யாசமாக இருந்தது. அதிலும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தது நடிப்பு அரக்கனாக நடித்த எஸ்ஜே சூர்யா தான் என்றால் அது மிகையல்ல.
மார்க் ஆண்டனி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இதையடுத்து படத்தை பிறமொழிகளிலும் வெளியிட விஷால் முடிவு செய்தார். இதையடுத்து இந்தி வெர்சனில் மார்க் ஆண்டனி வெளியிடப்பட்டது.
இதற்காக மும்பை சென்சார் அலுவலகத்தை விஷால் நாடிய போது சென்சார் அனுமதி சான்றிதழ் மற்றும் இந்தி வெர்சனுக்காக அவரிடம் இரண்டு தவணைகளில் ரூ. 6.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக விஷால், வீடியோ பதிவில் புகார் கூறியிருந்தார். இதையடுத்து விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று விஷால் விசாரணைக்காக மும்பை சென்றுள்ளார்.
அங்கு விஷால் மற்றும் அவரது உதவியாளரிடம் பலமணி நேரம் சிபிஐ அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், என் வாழ்க்கையில் சிபிஐ விசாரணைக்கு எல்லாம் செல்வேன் என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் இன்று மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடந்த விசாரணையில் கலந்துக்கொண்டேன், என்று ஆச்சரியமாக குறிப்பிட்டிருக்கிறார்.





