நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் செல்லமே படம் மூலம் அறிமுகமானார். தருண்கோபி இயக்கிய திமிரு படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது. லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படம், விஷாலுக்கு ஆக்ஷன் ஹீரோ என்ற அடையாளத்தை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து விஷால், முன்னணி ஹீரோவாக முன்னேறினார். குறிப்பாக அவன் இவன், சிவப்பதிகாரம், மலைக்கோட்டை, துப்பறிவாளன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, பாயும் புலி, இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள், நடிகர் விஷாலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்றுத் தந்தன.
எனினும் கடந்த சில ஆண்டுகளாக, விஷால் நடித்த பல படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. எதிர்பார்த்த படங்கள் பலவும் பெரிய ஏமாற்றத்தை தந்த படங்களாக அமைந்துவிட்டன. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதாக சொன்ன அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மேலும், பல சர்ச்சைகளில் சிக்கி, கோர்ட் வழக்கு போன்ற பிரச்னைகளுக்கும் விஷாலுக்கு ஏற்பட்டது.
இதற்கிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 100 கோடியை கடந்து வசூலில் சாதனை பல ஆண்டுகளுக்கு பிறகு, விஷாலுக்கு ஒரு கம்பேக் கொடுத்த படமாக இது அமைந்தது. அதனால் விஷால் இந்த படத்தை இந்தியில் வெளியிடவும் நடவடிக்கை எடுத்து, மார்க் ஆண்டனி இந்தியிலும் வெளியானது.
ஆனால், மார்க் ஆண்டனி படத்தை பொருத்த வரை, விஷாலை காட்டிலும் நடிப்பில் அசத்தியது நடிகர் எஸ்ஜே சூர்யாதான். அவர் மட்டும் நடிக்கவில்லை என்றால், மார்க் ஆண்டனிக்கு இவ்வளவு பெரிய வெற்றியும், ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்திருக்காது என்பதுதான் உண்மை. கதையும், கதையை சொன்ன விதமும் வித்யாசம் என்பதால், மார்க் ஆண்டனி ஹிட் அடித்தது.
இதைத்தொடர்ந்து, இயக்குநர் ஹரி இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கும் ஒரு படத்தில், பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் விஷால். மார்க் ஆண்டனி படம் வெற்றி பெற்றால், ஒரு டிக்கெட் விலையில், ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு ஒதுக்கி நிவாரண நிதியாக தரப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த முயற்சியும், அறிகுறியும் விஷாலிடம் காணப்படவில்லை. வழக்கம் போல, இதற்கும் உதார் விட்டுவிட்டு மறந்துவிட்டாரா என, ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





