தமிழ் சினிமாவில் குறிப்பிட்டத் தக்க வெற்றிகளை கொடுத்து, தனக்கான மார்க்கெட்டை அகலப்படுத்தி இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். தனக்கான கதை தேர்வுகளின் மூலம் பலரையும் கவனம் பெறச் செய்ய வைக்கும் அவர், வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சுசீந்திரனுக்கு முதல் படமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால், கிளைமாக்ஸ் காட்சியில் ஆடுகளத்திலேயே மரணித்துப் போவது போல் இருந்தது பலரது இதயத்தையும் கனக்கச் செய்தது. இப்படி விஷ்ணு விஷாலுக்கு முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த பலே பாண்டியா துரோகி ஆகிய திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் ஓடிப் போயின.
இதில் துரோகி திரைப்படத்தை, சுதா கொங்கரா இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமான அவர், அதன் பிறகு இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களை எடுத்தார். விஷ்ணு விஷாலுக்கு, துரோகி திரைப்படத்திற்கு பிறகு வந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல பெயரை பெற்று கொடுத்தன.
குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை என அவர் நடிப்பில் வெளியாகிய இந்த ஐந்து திரைப்படங்களுமே ஹிட் அடித்தது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் பலராலும் விருப்பப்படக் கூடிய அளவிற்கு இருந்ததால் விஷ்ணு விஷால் கொண்டாடப்பட்டார். அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் ராட்சசன். முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் தான் இதன் இயக்குனர்.
அதற்கு முன்பு கிரைம் திரில்லர் திரைப்படங்கள் எத்தனை இருந்தாலும், அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தது ராட்சசன் திரைப்படம். தற்போது வெளியாகும் அனைத்து கிரைம் திரில்லர் திரைப்படங்களுமே ராட்சசன் திரைப்படத்திலிருந்து தான் ஒப்பிடும் அளவிற்கு பலரும் விமர்சித்து வருகிறார்கள். தற்போது மூன்றாவது முறையாக ராம்குமார் உடன் அவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இதேபோல், சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டா குஸ்தி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் செல்ல அய்யாவுடன் விஷ்ணு விஷால் இணைய இருக்கிறார். இவர்களது கூட்டணியில் சிலுக்குவார் பட்டி சிங்கம் அந்த அளவு ரீச் ஆகவில்லை என்றாலும், கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அதற்கு அந்த படத்தின் கதைக்களம் வலிமையாக இருந்ததே காரணம் என்று கூறலாம். இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.





