வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். சுசீந்திரன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், கிராமத்தில் கபடி விளையாடும் இளைஞர்களையும், அந்த விளையாட்டின் பின்னணியில் இருக்கும் சாதிய வன்மத்தையும் காட்டி கைத்தட்டல்களை பெற்றது.

அதுவும் படத்தின் இறுதிக் காட்சியில், ஹீரோவான விஷ்ணு விஷால் களத்திலேயே உயிர் இழப்பது போன்று கதை அமைக்கப்பட்டது, ரசிகர்களின் நெஞ்சை கணக்கச் செய்தது. இதனால் படமும் வெற்றி பெற, முதல் திரைப்படத்திலேயே பலராலும் அறியப்பட்டார் விஷ்ணு விஷால்.
இதன் பிறகு பலே பாண்டியா, சுதா கொங்கரா இயக்குனரின் முதல் திரைப்படமான துரோகி ஆகிய இரண்டு படங்களும், விஷ்ணு விஷாலுக்கு தோல்வியையே கொடுத்தன. பின்னர் குள்ளநரி கூட்டம் மற்றும் நீர்ப்பறவை திரைப்படங்கள் மூலம் மீண்டும் பேசப்பட்ட விஷ்ணு விஷாலுக்கு, மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது முண்டாசுப்பட்டி திரைப்படம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படம், கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராம்குமார் அறிமுகமான முண்டாசுப்பட்டி, பீரியட் காமெடி திரைப்படமாக உருவாகி ரசிகர்களை ரசிக்க வைத்தது. காளி வெங்கட், முனிஷ் காந்த், ஆனந்த்ராஜ் காமெடியில் திரையரங்குகளில் சிரிப்பலை வீச, ரசிகர்களின் வயிறு புண்ணாகியது. அதுமட்டுமில்லாமல், கிராமத்து மக்களின் மூடநம்பிக்கைகளை நகைச்சுவை மூலம் வெளிப்படுத்திய ராம்குமாரை, பலரும் பாராட்டினர்.
இதன் பிறகு மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்த ராம்குமார், ராட்சசன் படத்தை எடுத்தார். முந்தைய திரைப்படம் நகைச்சுவை சார்ந்த கதைக்களம் என்றால், இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க கிரைம் திரில்லர் பாணியில் உருவானது. தமிழ் சினிமாவில் இன்று வரை கிரைம் திரில்லர் படம் எடுக்கப்படுகிறது என்றால், அது ராட்சசன் படத்தை ஒப்பிட்டே ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த திரைப்படம் மக்களை சென்று சேர்ந்துடன், ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தது.
இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து, தனுசுடன் இணைய இருந்தார் ராம்குமார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிப்பதாகவும் இருந்தது. ஆனால் தனுஷின் கால்ஷீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அந்தப் படம் கடைசி வரை எடுக்கப்படாமல் போனது. இதையடுத்து மீண்டும் விஷ்ணு விஷால் உடனேயே மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார் ராம்குமார். முழுக்க முழுக்க காதலை வைத்து பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, கொடைக்கானலில் தொடங்கியுள்ளது. தனுஷிற்கான கதையைத்தான் விஷ்ணு விஷாலை வைத்து ராம்குமார் எடுப்பதாக கூறப்படுகிறது. விஷ்ணு விஷால் – ராம்குமார் ஜோடி மூன்றாவது முறையாக இணைந்து இருப்பதால், படம் ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.





