நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வந்துவிடுவது என்று சில ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டார். அதனால்தான் தனது ரசிகர்கள் மன்றங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இப்போது அதை, தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சியாக மாற்றிவிட்டார், அன்றைய ரசிகர்கள்தான், இன்றைய கட்சி நிர்வாகிகளாக மாறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு பெரிய ஆளுமைகள் இருந்த வரையில், தமிழக அரசியலில் புதிதாக யாரும் கட்சி துவங்கி எதுவும் பெரிதாக சாதித்து விட முடியாது என்ற அச்ச உணர்வே பலரிடையே இருந்தது. இதை அடித்து நொறுக்கியவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த். தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவக்கி கருணாநிதி, ஜெயலலிதாவை மேடைக்கு மேடை தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக விமர்சித்தவர் விஜயகாந்த் தான்.
திமுக, அதிமுக வேண்டாம் என்று நினைத்த பெரும்பாலான தமிழக மக்களுக்கு, கேப்டன் விஜயகாந்த் வருகை பெரிய நம்பிக்கையை தந்தது. அதனால் அவருக்கு பெரிய அளவில் ஓட்டுகள் கிடைத்த நிலையில், அவரது கட்சி சந்தித்த 2வது சட்டசபை தேர்தலிலேயே, விஜயகாந்த் திமுகவை 3ம் இடத்துக்கு தள்ளி 2ம் இடத்தில், ஜெயலலிதா ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்தார்.
ஆனால் காலத்தின் கோலமாக, சிங்கமாக கம்பீரமாக அரசியலில் வலம் வந்த விஜயகாந்த், உடல் நலம் பாதிப்பால் அப்படியே முடங்கிப் போனார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தும் அவரால் மீண்டு வரமுடியவில்லை. 7 ஆண்டுகளாக நோயுடன் போராடிய விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வருகை, தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பலரிடையே காணப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றிக்கு, மோடி மீதான மக்களின் வெறுப்புதான் காரணமே தவிர, திமுக, காங்கிரஸ் மீதான அபிமானம் இல்லை என்பதுதான் 100 சதவீத உண்மையாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் நடிகர் விஜய், அரசியலுக்கு வந்தால் எப்படியும் 2026 சட்டசபை தேர்தலில் முதல்வராகி விடலாம் என்ற லட்சியத்துடன் இருந்து வருகிறார். ஆனால் சென்னையில் பல பகுதிகளில், அவரது ரசிகர்கள் நீங்கள் சினிமாவில் நடிப்பதை நிறுத்தக் கூடாது என்று சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். விஜயை நேரில் சந்தித்து, அவரிடம் நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சொல்ல முடியாத ரசிகர்கள், இவ்வாறு சுவர் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இந்த விளம்பரங்களை பார்த்தால், விஜய் அப்செட் ஆகி விடுவாரோ என்று அவரது கட்சியினர் புலம்பி வருகின்றனர்.





