நடிகர் அஜீத், பொதுவாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் கலந்துக்கொள்வது இல்லை. அவர் நடித்த படங்களின் பிரமோசன் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பது இல்லை. அவர் நடித்த படத்தின் இசைவெளியீட்டு விழா உள்ளிட்ட எதற்கும் அவர் வருவது இல்லை. படத்தின் தயாரிப்பாளர், இயக்குநரும் இதுகுறித்து அஜீத்குமாரிடம் பேசக் கூட யோசிக்கும் நிலை உள்ளது.
இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில், அஜர்பைஜானில் அஜீத்குமார் கலந்துக்கொண்டு இருக்கிறார். ஜனவரி மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கும் திட்டத்தில் படக்குழு இருப்பதால், தீபாவளியை கூட அஜர்பைஜானில்தான் அவர்கள் கொண்டாடியதாக தெரிகிறது.
அதேபோல் லியோ படத்துக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய்68 படத்தில் நடிகர் விஜய் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த படத்தின் படப்பிடிப்பும் படுவேகமாக, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் தமிழக அரசு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதாவது தமிழ் சினிமா கலைத்துறை சார்பில் இந்த விழா கருணாநிதியை போற்றும் விதமாக நடத்தப்படுகிறது. இதற்காக தமிழ் சினிமா சார்ந்த அனைவரும் இந்த விழாவில் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்கள், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்கள், இளையராஜா, ஏஆர் ரகுமான் போன்ற இசையமைப்பாளர்கள் உட்பட சினிமா சார்ந்த அனைவரும் இதில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக முக்கிய விஐபிகளை தேடி தேடிச் சென்று அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய திட்டமிட்டுள்ள விஜய், இந்த கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்பாரா, விழாவில் ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டு விடுமா, அதே போல் அஜீத்குமார் இந்த விழாவில் கலந்துக்கொள்வாரா என்பது இப்போது முக்கிய விவாதமாக மாறி இருக்கிறது.





