நடிகர் கார்த்திக்கு கடந்த ஆண்டு மெய்யழகன் திரைப்படம் வெளியானது. 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இதனை இயக்கியிருந்தார். அரவிந்த்சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம், நல்ல விமர்சனத்தை பெற்றது. உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை பலரும் பாராட்டினார்கள்.
இந்த நிலையில் கார்த்தி அடுத்ததாக சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் பாகம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வசூலையும் குவித்தது. இதன் காரணமாகத்தான் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் படத்தில் இருந்து பெரிய அப்டேட் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இதன் நடுவே கார்த்தி, நலன் குமாரசாமி இயக்கத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இதற்கு வா வாத்தியார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வருகிறார் கார்த்தி.
கார்த்தியின் தாத்தாவாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் இடம் பெற்றுள்ளார். எம்ஜிஆர் ரசிகர்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், அதன் கதைக்களம் எந்த போக்கில் செல்கிறது என்பது மட்டும் இதுவரை கணிக்கவே முடியவில்லை. படப்பிடிப்பு பணிகளும் தாமதமாகி வரும் நிலையில், இதன் ரிலீஸுக்காக பலரும் காத்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் தமிழ் படைப்பில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் தமிழ், தனது முதல் திரைப்படம் ஆக டானாக்காரனை இயக்கினார். நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம், மிகுந்த வரவேற்பை பெற்றது.
இப்படியான சூழலில் தான் தனது அடுத்த திரைப்படத்திற்காக கார்த்தியுடன் கைகோர்த்து இருக்கிறார் தமிழ். பீரியட் காலத்தில் கேங்ஸ்டர் திரைப்படமாக இது எடுக்கப்படுகிறது. இதற்கான கதைக்களத்தை ராமேஸ்வரத்தில் தேர்வு செய்திருக்கிறார்கள். படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வைகை புயல் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறதாம். அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில் கார்த்தியுடன் வடிவேலு இணைவது இதுவே முதல்முறை என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.





