பிரபல நாவல் எழுத்தாளர் திரைப்பட வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர். கே பாக்யராஜூடன் பல படங்களில் பணிசெய்தவர். நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இன்று தனது முகநூல் பதிவில் பட்டுக்கோட்டை பிரபாகர் கூறியிருப்பதாவது, உங்கள் வீட்டில் எத்தனை நூறு சந்திப்புகள். உங்களை நின்றபடி பார்த்திருக்கிறேன். உட்கார்ந்தபடி பார்த்திருக்கிறேன். நடந்தபடி பார்த்திருக்கிறேன்.
ஆனால் இன்று அதே வீட்டில் இந்தக் கோலத்தில் பார்த்ததே இல்லையே சார். நீங்கள் மருத்துவ மனையிலிருந்து வரும் முன்பே வந்து காத்திருந்தேன். அப்போதும் தைரியமாய்தான் இருந்தேன். நீங்கள் வந்து உங்கள் புன்னகையற்ற முகம் பார்த்ததும் உள்ளே நொறுங்கிவிட்டேன். அங்கே நிற முடியவில்லை. கை கூப்பி, மனம் கூப்பி வணங்குவது தவிர வேறென்ன செய்ய?நேற்றிரவு 10.30 க்கு நீங்களே அழைத்துப் பேசினீர்களே சார்.
அப்போதும்கூட உங்கள் வழக்கமான் பண்பாடு மாறாமல், அன்-டைம்ல கூப்புடறனா? தொந்தராவா? படுத்துட்டிங்களா பிரபாகர்? என்று உரையாடலைத் துவங்கினீர்களே? பேசி முடித்த பிறகு கடைசியாக நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்கு மீட் பண்ணலாமா? எங்கேன்னு நாளைக்கு சொல்றேன் என்று சொன்னீர்களே?
மாலையில் சந்திப்போம் என்று அழைத்துவிட்டு காலையிலேயே சந்தித்துவிட்டீர்களே சார்! இந்த உங்கள் கடைசி வார்த்தைகள் என் வாழ்நாள் முழுவதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். திரைப்பட உலகில் உங்கள் அருகில்கூட வர முடியாத பல சாதனைகளைச் செய்துவிட்டுத்தான் விடை பெற்றிருக்கிறீர்கள்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு தனி மரியாதையை ஏற்படுத்திய நீங்கள் கம்பீரமாக அதன் தலைவராகத்தான் விடை பெற்றிருக்கிறீர்கள். உங்கள் படங்கள் என்றென்றும் பாடங்கள். அவற்றைப் பார்த்துக் கற்ற சிஷ்யர்கள் ஆயிரக்கணக்கில். அவற்றில் சில படங்களின் உருவாக்கத்தில் அருகில் இருந்து கற்ற உங்கள் திரைக்கதை வித்தையின் சிறு சதவிகிதம் எனக்கு ஆயிரம் பகுதிகளுக்கு மேலான தொலைக்காட்சித் தொடர்களுக்கும், பல திரைப்படங்களுக்கும் திரைக்கதை அமைக்க உதவி வருகிறது.
நீங்கள் இனி இல்லை, இனி சந்திக்க இயலாது, இனி போனிலும்கூட பேச முடியாது என்கிற கசக்கும், வலிக்கும் நிஜத்தை என் மனதிற்குப் புரியவைக்க வெகு காலமாகும். உங்களைப் பிரித்துச் சென்ற இயற்கை மீது கோபம் கொப்புளிக்கிறது. அதிகமாய் அன்பு வைத்தால் அதிகமான வலிதான். ரொம்ப ரொம்ப ரொம்ப வலிக்கிறது சார் என்று அந்த பதிவில் பட்டுக்கோட்டை பிரபாகர் கூறியிருக்கிறார்.





