தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இளையராஜாவின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சரத்குமார் நடித்த அரவிந்தன் என்ற படம் மூலம் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 16 என்றாலும், இசையில், பாடல் மெட்டுகளில் அசத்தினார்.
ஆனால் துவக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அவர் இசையமைத்த படங்களில் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டாலும், ஹிட் ஆனாலும் படங்கள் வெற்றி பெறாதது, அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. ஒரு கட்டத்தில் யுவன் சங்கர் ராஜாவை ராசி இல்லாத இசையமைப்பாளர் என்ற விமர்சனமும் எழுந்தது.
ஆனாலும் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா போராடி வந்தார். பல படங்களுக்கு இசையமைத்தார். அப்போது 1990களில் வெளிவந்த தீனா படம் பெரிய வெற்றியை யுவன் சங்கர் ராஜாவுக்கு கொடுத்தது. இந்த படத்தில் அஜீத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். லைலா நாயகியாக நடித்திருந்தார். யுவன் இசையமைத்த இந்த படத்தில் பாடல்கள் அனைத்துமே பெரிய வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், அறிந்தும் அறியாமலும் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து பெரிய அளவில் முன்னணி இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா மாறினார். இளையராஜா மகன் என்ற அடையாளத்தை கடந்து முன்னணி இசையமைப்பாளராக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார். கடந்த மாதம் வெளியான விஜய் நடித்த தி கோட் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது அப்பா இளையராஜா குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நான் சிறுவயதில் இருந்த போது ஒரு முறை அப்பா பீச்சுக்கு அழைத்துப் போவதாக என்னிடம் கூறியிருந்தார். நானும் ரெடியாகி காரில் அமர்ந்து வெயிட் செய்து கொண்டு இருந்தேன். அந்த சமயம் பார்த்து ஒரு தயாரிப்பாளர் வீட்டுக்கு வந்துவிட்டார். அப்பாவுடன் நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்தார்.
ரொம்பவும் நேரம் ஆன நிலையில், தயாரிப்பாளர் அப்பாவிடம் பேசிக் கொண்டே இருந்ததால், என்னால் பொறுமையாக காருக்குள் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அதனால் கார் ஹாரனை அடித்துக் கொண்டே இருந்தேன். இதனால் அங்கு வந்த அப்பா, என்னை கோபத்தில் அடித்துவிட்டார். அதுதான் நான் அப்பாவிடம் முதல்முறையாக அடி வாங்கியது, என்று கூறியிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இது தற்போது வைரலாகி வருகிறது.





