தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் மகன்தான் ஜீவா என்பது இங்கு பலருக்கும் தெரிந்திருக்கும். சூப்பர் குட் பிலிம்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆர் பி சவுத்ரி, தனது ஐம்பதாவது படைப்பில் மகன் ஜீவாவை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். 2003ஆம் ஆண்டு, ஆசை ஆசையாய் என்னும் தலைப்பில் வெளியான இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான மற்றொரு படமான தித்திக்குதே படத்தின் நடித்தார் ஜீவா. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், ஜீவாவின் நடிப்பு திறமையை பலரும் பாராட்டினர். இதன் பிறகு தனது திரையுலக பயணத்தை தொடங்கிய ஜீவா, அடுத்ததாக அமீருடன் சேர்ந்தார்.
ராம் எனும் தலைப்பில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 17 வயது சிறுவனுக்கு உண்டான மனோபாவத்தில் நடித்திருந்த நாயகன் ஜீவா, பலராலும் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார். ராம் திரைப்படத்திற்கு இன்னொரு தூணாக அமைந்தது யுவன் சங்கர் ராஜாவின் இசை தான். ஒவ்வொரு பாடலையும் யுவன் சங்கர் ராஜா செதுக்க, அது இன்றுவரை பலரது இளைஞர்களின் செல்போனில் விருப்ப பாடலாக ஒலித்து வருகிறது.

ராம் திரைப்படம் ஜீவாவுக்கு பல விருதுகளையும் பெற்றுகொடுத்தது. இதையடுத்து டிஷ்யூம், ஈ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இருப்பை தக்க வைத்துக் கொண்டார் நடிகர் ஜீவா. ராம் திரைப்படத்திற்கு பிறகு, ஜீவாவுக்கு அடுத்த திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கற்றது தமிழ். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவினாலும், விமர்சன ரீதியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து ஜீவாவுக்கு அடுத்த ஹிட் கொடுத்த திரைப்படம் சிவா மனசுல சக்தி. குடித்துவிட்டு பாரில் அலும்பல் செய்யும் இளைஞராக நடித்திருந்த ஜீவா, மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் என்ற ஒரு டயலாக் மூலம் ரசிகர்களை அள்ளினார். இதன் பிறகு கோ, விஜய்யுடன் நண்பன், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஜீவா, தற்போது ஒரு வெற்றியை கூட கொடுக்க முடியாமல் தள்ளாடி வருகிறார்.
இந்த நிலையில் அவர், ஆந்திர முதலமைச்சர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் தழுவி எடுக்கப்படும் யாத்திரா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில், ராஜசேகர ரெட்டியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதற்கான போட்டோ சூட் நடத்தப்பட்டபோது அவர் அப்படியே ஜெகன் மோகன் ரெட்டியை போன்று இருப்பதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.





