நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது நடிகை நயன்தாராவும், அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்தனர். பிறகு 7 ஆண்டுகள் கழித்து திருமணமும் செய்துக்கொண்டனர். வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் செய்துக்கொண்ட வீடியோ உள்ளிட்ட நயன்தாராவின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்துக்கு நயன்தாரா; பியான்ட் த பேரி டேல் என டைட்டில் வைக்கப்பட்டு, இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இதற்கா நெட்பிளிக்ஸ் ரூ. 80 கோடி விலை தந்ததாக கூறப்பட்டது.
இந்த ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்ஓசி தரவில்லை என்றும், அதை பயன்படுத்தியதற்காக ரூ. 10 கோடி கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் நேற்று பெரிய அளவில் வைரலானது.
ஆனால் நயன்தாரா; பியான்ட் த பேரி டேல் ஆவணப்படம் பார்த்த பலர், இதற்காக இத்தனை அலப்பரை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மொத்தம் ஒரு மணி நேரம் 20 நிமிடம் ஓடும் இந்த படத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண விழா காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
மீதி ஒரு மணி நேரம் 10 நிமிடமும் உலகத்திலேயே மிகச் சிறந்த ஆண் விக்னேஷ் சிவன்தான் என்று நயன்தாராவும், அதே போல் உலகத்திலேயே மிகச்சிறந்த பெண் நயன்தாரா தான் என்று விக்னேஷ் சிவனும் பேசுவதுதான் ஆவணப்படத்தில் காணப்படுகிறது.
அத்துடன் இயக்குனர் விஷ்ணுவர்தன் போன்றவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். நயன்தாராவை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் மலையாளத்தில் பேசுகிறார். இதில் இயக்குனர் நெல்சன் மட்டுமே தமிழில் அழகாக தன் கருத்துகளை சொல்கிறார். இந்த ஆவணப்படத்தில் 5 நிமிடங்கள் கூட தமிழில் இல்லை. இதற்கா இத்தனை பில்டப் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.





