தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். அவரது இயக்கத்தில் முதலில் வெளியான படம் அர்ஜூன் நடித்திருந்த ஜென்டில்மேன். தயாரிப்பாளர் கே டி குஞ்சுமான் தயாரிப்பில் உருவான இந்த படம் 1990களிலேயே மெகா ஹிட் படமாக பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
தொடர்ந்து காதலன் முதல்வன் அந்நியன் இந்தியன் நண்பன் சிவாஜி ரோபோ என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர் இப்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தெலுங்கு படத்தயாரிப்பாளர் திரு ராஜூ பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம்சரண் ஹீரோவாகவும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பான் இந்தியா படமாக கேம் சேஞ்சர் படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா தமிழ் மொழி மட்டுமே அவருக்கு தெரியும் என்ற நிலையில், அவர் இந்தி மலையாளம் தெலுங்கு கன்னடம் என பிற மொழிகளையும் கற்றுக்கொண்டு எல்லா வெர்ஷன்களிலும் படத்தில் அவரே சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேம் சேஞ்சர் படம் குறித்த ஒரு முக்கிய தகவலை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 4 பாடல்களுக்காக மட்டும் இயக்குனர் ஷங்கர் 75 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். ஆயிரக்கணக்கில் டான்ஸர்கள் பங்கேற்ற ஒரு பாடல், ஒரு கிராமத்தையே செட்டாக அமைத்து எடுக்கப்பட்ட ஒரு பாடல், நியூசிலாந்தில் சென்று ஷூட் செய்யப்பட்ட ஒரு பாடல், 100 ரஷ்ய டான்ஸர்கள் பங்கேற்ற ஒரு பாடல் என மிக பிரம்மாண்டமாக 4 பாடல்களை இயக்குனர் ஷங்கர் இயக்கி இருக்கிறார்.
வழக்கமாக பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் இயக்குனர் ஷங்கருக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதனால் இனிமேல் கொஞ்சம் அடக்கி வாசிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், இல்லை இன்னும் இயக்குனர் ஷங்கர் பழைய பார்மில்தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் 4 பாடல்களுக்கு ரூ. 75 கோடியை செலவழித்து உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





