சின்னத்திரையில் அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் இல்லங்களுக்கும் குடி பெயர்ந்தவர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து அடிக்கும் அவரது காமெடி, சொல்லிலே இருக்கும் ஹியூமர், யாரை வேண்டுமானாலும் அசால்டாக கலாய்ப்பது என அவரது ரூட் பலருக்கும் கலகலப்பை கொடுத்ததால், சிவகார்த்திகேயன் வெள்ளி திரைக்கு வரும் போது அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றார்கள் ரசிகர்கள்.
இதையும் மிகச் சரியாக நடிகர் பயன்படுத்திக் கொண்டார். எந்த ஒரு சிக்கலும் இல்லாமல், ரசிகர்களுக்கு தனது நகைச்சுவை மட்டுமே பிடிக்கும் என்பதை உணர்ந்து கொண்டு அது தொடர்பான படங்களையே கொடுத்துக் கொண்டிருந்தார். இதுதான் அவருக்கு குடும்ப ஆடியன்ஸ்களை பெருக்குவதற்கு மிக முக்கியமான பாயிண்டாக அமைந்தது.
மெரினாவில் தொடங்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் என கலகலப்பான திரைப்படங்களில் அவர் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தனது ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன், அதிரடி படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1965 ஆம் காலகட்டங்களில் நடைபெறும் சம்பவம் போன்று இந்த திரைப்படம் காட்சி அமைக்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் வருகிறார். இந்தி திணிப்புக்கு எதிராக இந்த திரைப்படம் பேசுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சிவகார்த்திகேயன் தனது 25 திரைப்படங்களில், அதிகம் பழைய பட டைட்டில்களை உபயோகித்திருப்பது பட்டியலாக வெளி வந்துள்ளது. அவருக்கு முதல் திரைப்படமான எதிர்நீச்சல் படமே, நகைச்சுவை நடிகர் நாகேஷ் நடித்த திரைப்படத்தின் தலைப்பு தான். இதுபோக ரஜினியின் வேலைக்காரன் மற்றும் மாவீரன் ஆகிய திரைப்படங்களின் தலைப்புகளையும் சிவகார்த்திகேயன் பயன்படுத்தி விட்டார்.
நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படமும், சிவகார்த்திகேயன் படத்தில் பயன்படுத்தப்பட்டு விட்டது. கமல்ஹாசன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற காக்கி சட்டை திரைப்படமும், இந்தப் பட்டியலில் சேர்ந்து இருக்கிறது. இதனை, தற்போது பலரும் குறிப்பிட்டு இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.





