எப்போதுமே தமிழ் சினிமாவில் காதல் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பே தனிதான். அன்று முதல் இன்று வரை காதல் படங்களை ரசிகர்கள் அற்புதமாக ரசித்து மகிழ்வார்கள். மீண்டும் மீண்டும் அந்த படங்களை பார்த்து ரசிப்பார்கள். அந்த வரிசையில் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படம் தமிழ் சினிமாவில் காதல் முத்திரை பதித்த படமாகும்.
ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் நடித்த இந்த படம் கடந்த 2004ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். கவிஞர் நா முத்துக்குமாரின் பாடல் வரிகள் படத்துக்கு மேலும் வலிமை சேர்த்தது. இந்த படத்தை இளம் வயதினர் ரசிகர்கள் கொண்டாடினர்.
மேலும் இந்த படத்தில் விஜயன் மனோரமா சுமன் ஷெட்டி மயூரி சுதா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை, கனா காணும் காலங்கள், நினைத்து நினைத்து பார்த்தால் போன்ற பாடல்கள் தெருவெங்கும் ஒலித்தன. இந்த பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த படம் ரசிகர்களின் மனங்களை வென்றது.
இந்நிலையில் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் எப்போது வெளியாகும் என இயக்குனர் செல்வராகவன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். விரைவில் அது சாத்தியப்படும் என்று கூறி வந்த இயக்குனர் செல்வராகவன், சில ஆண்டுகளாக நடிப்பிலும் பிஸியாகி விட்டார். பல படங்களில் கமிட் ஆகி இப்போதும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இதற்கிடையே 7ஜி ரெயின்போ காலனி 2 படப்பிடிப்பு கடந்தாண்டில் துவங்கி நடந்து வருகிறது. இந்த 2ம் பாகத்திலும் நடிகர் ரவி கிருஷ்ணா தான் நாயகனாக நடிக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகள் எல்லாம் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. படத்தின் நடித்த மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இப்போது 7ஜி ரெயின்போ காலனி 2 படம் குறித்த முக்கிய தகவல்கள் வௌியாகி உள்ளது. அதன்படி வருகிற தீபாவளி பண்டிகைக்கு அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படத்தின் டீசரை வருகிற ஜூன் மாதம் 2வது வாரத்தில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





