ஆரம்ப காலங்களில் விஜய் சேதுபதி யதார்த்தமான திரைப்படங்கள் ஏராளமானவற்றை கொடுத்துள்ளார். இதில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த திரைப்படங்களில் ஒன்றாக, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்தை கூறலாம். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்தான் பிரேம்குமார்.
பின்னாளில் விஜய் சேதுபதியை வைத்து 96 என்னும் அற்புதமான திரைப்படத்தை அவர் கொடுத்தார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ஜானுவாக வாழ்ந்திருந்தார் திரிஷா. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க, விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகிய இருவர் மட்டுமே வருவார்கள்.
ஆனால் அது ரசிகர்களுக்கு எந்த ஒரு விதத்திலும் சலிப்பை ஏற்படுத்தாதபடி பார்த்துக் கொண்டார் இயக்குனர் பிரேம்குமார். தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் மட்டும்தான் எத்தனை தலைமுறை வந்தாலும் நின்று பேசும். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் அவர் 96 காவியத்தை கொடுத்திருந்தார்.
இதன் பிறகு பிரேம்குமாரின் அடுத்த திரைப்படம் குறித்த ஆவல் மிகப் பெரும் அளவில் எழுந்தது. இப்படி இருக்க கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை வைத்து மெய்யழகன் திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார். 96 திரைப்படத்தைப் போலவே இதுவும் தஞ்சாவூரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. தனது முதல் திரைப்படத்தில் காதலை விவரித்து இருந்த பிரேம்குமார் இதில் உறவுகளின் உன்னதத்தை உணர்ச்சி பொங்கக் கூறி இருந்தார்.
கிராமத்து பின்னணியில், வெள்ளந்தியான கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தார் கார்த்தி. அதேபோல், அரவிந்த்சாமி நடிப்பும் படத்தில் அற்புதமாக இருந்தது. 96 போலவே இந்த திரைப்படத்திற்கும் பலரது பாராட்டையும் பிரேம்குமார் பெற்றார். தற்போது விக்ரம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோருக்கு தனித்தனியாக ஒரு கதையை கூறியிருப்பதாகவும், இதுபோக 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அவர் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அவரது பழைய பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகிவிடுகிறது. அதில், 96 திரைப்படத்திற்கு பிறகு, ஒரு சாகசம் கலந்த விறுவிறுப்பான கதையை வைத்து திரைப்படம் எடுக்க இருந்தேன். இதேபோல் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த ஒரு படத்தையும் எடுப்பதற்கு யோசித்து இருக்கிறேன். 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையையும் எழுதி முடித்து விட்டேன். ஒரே மாதிரியான கதையை எடுத்தால் எனக்கே போர் அடித்து விடும் என்று கூறியிருக்கிறார்.





