தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நல்ல இயக்குனராக, நல்ல நடிகராக இருப்பவர் சமுத்திரக்கனி. நாடோடிகள் என்ற படத்தை இயக்கி, மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார். அதற்கு முன்பாக, சசிக்குமார் இயக்கத்தில் சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்தும் அசத்தியிருந்தார். இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன.
இயக்குனராக நல்ல படங்களை கொடுத்த சமுத்திரக்கனி, நல்ல நடிகராகவும் தன்னை பல படங்களில் வெளிப்படுத்தி வருகிறார். துவக்கத்தில் கே பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்த சமுத்திரக்கனி, ராஜ் டிவியில் ஒளிபரப்பான ரமணி வெர்சஸ் ரமணி சிரிப்பு தொடரில் சில காட்சிகளில் நடித்தும் இருந்தார்.
நாடோடிகள், சுப்ரமணியபுரம் படங்களை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை, அங்கீகாரத்தை பெற்ற சமுத்திரக்கனி ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். 28 ஆண்டுகளுக்கு முன் இந்தியன் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்ற சமுத்திரக்கனி நிராகரிக்கப்பட்டார்.
ஆனால் 28 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியன் 2 படத்தில் சமுத்திரக்கனி நடிப்பதற்காகவே ஒரு கேரக்டர் உருவாக்கப்பட்டு, அதில் அவரை ஷங்கர் நடிக்க செய்திருக்கிறார். அன்று புதுமுக நடிகர்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பை இழந்த சமுத்திரக்கனி, இப்போது தனக்கான வாய்ப்புகள் தேடிவரும் அளவுக்கு நடிப்பில் முக்கிய இடத்தை அடைந்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி கூறுகையில், கமல் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். ஆபரேட்டராக இருந்த காலகட்டத்தில் அவர் நடித்த வாழ்வே மாயம் படத்தை அதிகமுறை ஓட்டியிருக்கிறேன். அவர் நடித்த ஹே ராம், அன்பே சிவம் படங்கள் ரொம்பவும் பிடிக்கும். இந்தியன் படத்தில் நடிக்க அனுமதி மறுக்கப்பட்டேன். இந்தியன் 2 படத்தில், எனக்காகவே ஒரு கேரக்டரை எழுதியதாக டைரக்டர் ஷங்கர் கூறியது மகிழ்ச்சியாக இருந்தது.
கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலை கமலை வைத்து இயக்க ஆசைப்பட்டேன். அதில் வரும் மொக்கை நாயக்கர் கேரக்டரில் கமலை நடிக்க வைக்க விரும்பினேன். கமல் சார் அலுவலகத்துக்குச் சென்று அந்த நாவலை கொடுத்து, என் விருப்பத்தையும் சொல்லிவிட்டு வந்தேன். அதன்பிறகு அங்கிருந்து எந்த தகவலும் வராததால் நானும் விட்டுவிட்டேன், என்று சமுத்திரக்கனி கூறியிருக்கிறார்.





