2015-க்கு பிறகு பெரும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது சென்னை மாநகரம். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கன மழை கொட்டி தீர்க்க, திரும்பும் திசை எங்கும் வெள்ளக்காடாக காட்சி இருக்கிறது. குறிப்பாக மேற்கு தாம்பரம் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு தண்ணீர் அங்கு தேங்கியுள்ளது. அதுவும் முடிச்சூர் உட்புற பகுதிகளில் இன்னும் இளமை மோசம். ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் அங்கு தண்ணீர் வழியாததால் மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கனமழை வெள்ளத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் அவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
அன்றாட தேவைகளான உணவு பால்பாக்கெட் போன்றவற்றிற்கும் மக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக அரசு, தன்னார்வலர்களும் இதில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. தொடர்ந்து படகுகள் மூலம் வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளில் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தனது ரசிகர்களும் களத்தில் நின்று மக்களுக்கு உதவ வேண்டும் என நடிகர் விஜய் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவர், ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் விஜய் கூறியதற்கு நேர் மாறாக அவரது ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
களத்திற்கு அவர்கள் சென்றாலும், எங்கு பார்த்தாலும் விஜய் மக்கள் இயக்கக் கொடி, விஜய் புகைப்படத்தை வைத்து அவர்கள் அலப்பறை கொடுத்து வருகின்றனர். அதுவும் சமீபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் உணவு அளிக்க, ஒவ்வொரு இலையிலும் சாப்பாடு பரிமாறப்படும் போது அதன் அருகே விஜய் புகைப்படத்தை அவர்கள் எடுத்துச் சென்றது, பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதற்கு விஜய் எதுவும் கூறாமலே இருந்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





