தமிழ் சினிமாவில் அம்பிகா, ராதாவை தெரியாத இருக்க முடியாது.ஏனெனில் கடந்த 1980-90களில் அம்பிகா, ராதா இருவரும் நடிக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகைகளாக இந்த சகோதரிகள் வலம் வந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன், கார்த்திக் என முன்னணி நடிகர்களுக்கு ராதா, அம்பிகா இருவருமே பல படங்களில் ஹீரோயின்களாக நடித்தனர். குறிப்பாக மாவீரன், மிஸ்டர் பாரத், காதல் பரிசு, காக்கி சட்டை, அம்மன் கோவில் கிழக்காலே, ஜாக்பாட், மெல்லத் திறந்தது கதவு, விக்ரம், இதயகோவில், ராஜாதி ராஜா, எங்கேயோ கேட்ட குரல், சகலகலா வல்லவன் என அந்த கால ஹிட் படங்களில் இவர்கள்தான் முக்கிய நாயகிகள்.
அம்பிகா, ராதா இருவருமே 60 வயதுகளை கடந்த நிலையில், இப்போது சினிமாவில் நடிப்பதில்லை. அம்பிகா டிவி சீரியல்களில் நடிக்கிறார். ராதா, டிவி நிகழ்ச்சிகளில் செலிபரட்டியாக மட்டுமே பங்கேற்கிறார். சமீபத்தில் கேரளாவில் ராதாவின் மகள் கார்த்திகா திருமணம் கோலாகலமாக நடத்தப்பட்டது. பல திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றன.
நடிகைகள் அம்பிகா, ராதாவுக்கு நிறைய அசையா சொத்துகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, ஏஆர் எஸ் ஸ்டுடியோ. இது அம்பிகா, ராதாவுக்கு மட்டுமே சொந்தமானது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலானது. இந்த ஏஆர்எஸ் கார்டனில் படப்பிடிப்புகள் நடத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அங்கு ஒரு மாதமாக படப்பிடிப்பு எதுவும் நடத்தப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான காட்ரகட்ட பிரசாத் என்பவரிடம் இருந்து, ராதா, அம்பிகா ஆகியோரின் தம்பி அர்ஜூன் 25 லட்சம் ரூபாய் கடனாக வாங்கிய நிலையில் அதில் 19 லட்சம் ரூபாயை திருப்பி தந்துள்ளார். மீதி 6 லட்சம் ரூபாயை திருப்பித் தரவில்லை. இதுகுறித்து கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஆகி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த காட்ரகட்ட பிரசாத் தயாரிப்பாளர் சங்கம், பெப்சி சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அம்பிகா, ராதாவுக்கு சொந்தமான ஏஆர்எஸ் கார்டனில் படப்பிடிப்புகளை நடத்த அந்த சங்கங்கள் தரப்பில் இருந்து தற்காலிக தடை விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக அங்கு படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நேரடியாக தடை விதிக்காமல், மறைமுகமாக தடை கூறி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்த வாடகை கட்டணத்தில் அங்கு நடந்து வந்து சின்ன பட்ஜெட் படங்களின் படப்பிடிப்புகளும், டிவி சீரியல் படப்பிடிப்புகளும் தடைபட்டு தயாரிப்பாளர்கள் கவலையில் உள்ளனர்.





