ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிக முக்கியமான படம் படையப்பா. இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிக்கு தந்தையாக நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த். சிவாஜி தனது சினிமா வாழ்க்கையில் அதிக சம்பளம் பெற்றது இந்த படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படையப்பா படத்தை பொருத்த வரை இன்றும் படையப்பா, நீலாம்பரி கேரக்டர்கள் தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு ரஜினிக்கு எதிர்ப்பு காட்டும் ஒரு கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். சமீபத்தில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தார். ஒரு காட்சியில் ரீடேக் அதிகமாக போனதால், இந்த நீலாம்பரி முன்னால, இந்த படையப்பா இமேஜே போச்சு என்றும் பட விழாவில் பேசிய ரஜினி, நகைச்சுவையாக அதை குறிப்பிட்டார்.
நீலாம்பரி கேரக்டர், முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிய இன்ஸ்பிரேசனில் எடுக்கப்பட்டது. அந்த கோபம், பிடிவாதம், துணிச்சல் போன்ற விஷயங்களை நீலாம்பரி கேரக்டராக அமைக்க, நான் ஜெயலலிதா குணங்களை பின்பற்றி எடுத்தேன் என கூறியிருந்தார். சமீபத்தில் அதற்கு பதிலளிக்கும் விதமாக மாஜி அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா இருந்த போது இதை சொல்லி இருந்தால், இந்த இயக்குநர் வெளியே நடமாடி இருக்க முடியாது என விமர்சித்திருந்தார்.
இப்படி படையப்பா படம் வெளியானது முதல் இன்று வரை ஒரு பேசுபொருளாக இருக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. படையப்பா இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், நீலாம்பரி கேரக்டர் அதில் இறந்து விடுவதால் மீண்டும் அந்த படம் வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே படையப்பா, வீரா, வேலைக்காரன், மனிதன், முத்து உள்ளிட்ட பல படங்களில் ரஜினியுடன் நடித்த நடிகர் செந்தில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் ரஜினி பற்றி நிறைய பேசியிருக்கிறார். அதில் செந்தில் கூறியதாவது, ரஜினி ஒரு டைமிங் ஆர்ட்டிஸ்ட். அவரால் ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம், அப்பா, மகன், தாத்தா என எந்த கேரக்டரிலும் அவரால் சிறப்பாக நடிக்க முடியும். நடிகர் முத்துராமனை போல ரஜினியும் ஒரு நவரச நாயகன்.
படையப்பா படத்தில் நானும், அவரும் நடித்த ஒரு காட்சியில், மாப்பிள்ளை அவர்தான், ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னோடது என்ற காமெடி சிறியதாக, 2,3 வரிதான் இருந்தது. அதை அவ்வளவு பெரிய காமெடியாக டெவலப் செய்து மாற்றியது ரஜினிதான். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் இரவெல்லாம் தூங்க மாட்டார். டைரக்டருடன் டிஸ்கசன் செய்துக்கொண்டே இருப்பார். ஒருவர் செய்த நல்ல விஷயத்தை நன்றாக இருக்கிறது என்று பாராட்டும் ரஜினி, அவரே அதை நன்றாக செய்யாத போது எதுவும் சொல்லாமல் சென்றுவிடுவார். அதுதான் அவரது சிறந்த குணம் என பாராட்டி இருக்கிறார் நடிகர் செந்தில்.





