போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதற்கு முன்பாக சிவி எனும் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இருப்பினும் இயக்குனராகவே அவர் தமிழ் சினிமா ரசிகர்களால் கண்டறியப்பட்டார். சிம்பு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது.
இதன்பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் விக்னேஷ் சிவன் வந்தார். பிறகு அங்கிருந்து இயக்குனராகவே தொடர விரும்பிய அவர், தனது வலுவான திரைக்கதையின் மூலம் நானும் ரவுடிதான் திரைப்படத்தை அமைத்தார். விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காமெடி கலந்த எழுதப்பட்ட இதன் திரைக்கதை நல்ல வொர்க் அவுட் ஆனதால், ரசிகர்கள் நானும் ரவுடிதான் திரைப்படத்தை கொண்டாடினர்.
இதன் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றன. தொடர்ந்து, லவ் டுடே படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனுடன் விக்னேஷ் சிவன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு எல் ஐ சி என பெயரிடப்பட்டுள்ளது. இதில் எஸ் ஜே சூர்யா கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த நிலையில் எல்ஐசி படத்தின் தலைப்புக்கு இயக்குனர் எஸ் எஸ் குமரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்,
விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல் ஐ சி என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் இந்த பெயரை 2015 ஆம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸின் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன்.
ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.
LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே அஜித் படத்தை எடுப்பதற்கு முன்பே ஏற்பட்ட பிரச்சனையால் விக்னேஷ் சிவன் அதிலிருந்து விலகினார். தற்போது மீண்டும் அவர் ஒரு படத்தை தொடங்குவதற்கு முன்பாகவே, இப்படி ஒரு பிரச்சனை ஆரம்பித்து விட்டதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





