சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. மழைவெள்ளத்தில் குடியிருப்புகள் சிக்கிக்கொண்டன. பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவிதங்களில் உதவிக்கரங்கள் நீண்டன. அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏ, எம்பிகள், அமைச்சர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பொது ஆர்வலர்கள் இயன்ற உதவிகளை செய்தனர். உணவு பொட்டலங்கள், தண்ணீர், பிஸ்கட், ரொட்டி பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. ஆபத்தான வெள்ளப் பகுதியில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கப்பட்டனர்.
இதில் சினிமா நடிகர்களுக்கும் விதிவிலக்க. இந்தி நடிகர் அமீர்கான், விஷ்ணு விஷால், நடிகை நமீதா போன்றவர்களின் குடியிருப்புகளும் மழைவெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் அமீர்கானை மீட்க போட் அனுப்பி உதவியவர் நடிகர் அஜீத்குமார் என்ற தகவல் வைரலானது.
சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் சினிமா நட்சத்திரங்கள் அக்கறை காட்டினர். நயன்தாரா, பார்த்திபன், நிஷா போன்றவர்கள் உணவு பொட்டலங்களை வழங்கினர். நடிகர்கள் சூர்யா – கார்த்தி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் அமீர், சூரி என பலரும் தமிழக முதல்வரிடம் ரூ. 10 லட்சம் வரை நிவாரண நிதி அளித்தனர். நடிகர் வடிவேலு ரூ. 6 லட்சம் வழங்கினார்.
ஆனால் இதே போன்ற பாதிப்புதான் தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்கடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. கனமழையால் பல பகுதிகளில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் கிடைக்காமல், வீடுகளை இழந்து வசிப்பிடமின்றி தவித்து வருகின்றனர். அரசு தரப்பில் தேவையான உதவிகளை செய்து வந்தாலும், பல இடங்களில் மக்கள் உதவியின்றி தவிக்கின்றனர்.
சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது ஓடி ஓடி உதவிய சினிமா நட்சத்திரங்கள் யாருமே, தூத்துக்குடிக்கோ, திருநெல்வேலிக்கோ வந்து உதவி செய்ய முன்வரவில்லை. சில இடங்களில் ரசிகர் மன்றங்கள் சார்பில் உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை சென்னையை தவிர மற்ற ஊர்களில் இதுபோன்ற பாதிப்புகள் வந்தால் நடிகர்கள், அது நம்ம ஏரியா இல்லை என்று கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்களா, அந்த ஊர்களிலும் சினிமா தியேட்டர்கள் உள்ளது என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டுமா என பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





