தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, சிம்பு, அதர்வா, விஷால் ஆகியோரின் மீது ரெட் கார்டுக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஒரு செய்தி சமீபத்தில் வெளிவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடியது. அதில் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு கால்ஷீட் தராமல் இருக்கும் நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க அந்த கூட்டத்தில் முடிவெடுத்தனர்.

அதன் படி எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, சிம்பு, அதர்வா, விஷால் ஆகியோருக்கு ரெட் கார்டுக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. இதில் எஸ்.ஜே.சூர்யா மீது தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவும், அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகனும், சிம்புவின் மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் புகார் அளித்துள்ளதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில், தற்போது இந்த பட்டியலில் நடிகர் தனுஷும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், இந்த பட்டியலில் தனுஷ் இணைந்தது குறித்தான பின்னணியை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது தயாரிப்பாளர் சங்கத் தலைவரான முரளி ராமசாமிக்கும் தனுஷிற்கும் ஒரு தனிப்பட்ட முறையில் பிரச்சனை இருக்கிறதாம். அதாவது முரளி ராமசாமியும் சன் பிக்சர்ஸும் இணைந்து தனுஷை கதாநாயகராக வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தனராம். அந்த படத்திற்காக முரளி ராமசாமி தனுஷிற்கு ரூ.5 கோடி அட்வான்ஸ் தந்திருந்தாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில் சில காரணங்களால் அந்த படப்பிடிப்பு நின்றுபோனதாம். ஆனால் தனுஷ் தான் வாங்கிய அட்வான்ஸை திருப்பி தரவில்லையாம். முரளி ராமசாமிக்கும் தனுஷிற்கும் இடையே இருக்கும் இந்த தனிப்பட்ட பிரச்சனைதான் ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளதாக அந்தணன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.





