நடிகர் விஜயகாந்த் பற்றி பேசுபவர்கள் எல்லாம் அவரை பற்றி சொல்கிற முக்கியமான விஷயங்களில் முதன்மையானது, யாராக இருந்தாலும் முதலில் அவரை சந்திப்பவர்களிடம் அவர் கேட்பது சாப்பிட்டீங்களா, என்பதுதான். அவரது வீட்டில், மண்டபத்தில், கட்சி அலுவலகத்தில் எப்போது யார் போனாலும் சாப்பிட்டு விட்டு வரலாம்.
தி நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு காலகட்டத்தில் உதவி இயக்குநர்கள் என யார் வந்தாலும் உணவு கொடுங்கள் என்று கூறியவர் விஜயகாந்த். அதனால் 40 ஆண்டுகளுக்கு முன் உதவி இயக்குநர்களாக சென்னையில் பட வாய்ப்புக்காக அலைந்தவர்களுக்கு உணவு அளித்த அன்னதாதா விஜயகாந்த் தான்.
விஜயகாந்தை பொருத்தவரை எப்போதும் உணவில் ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ, டைரக்டருக்கு என்ன உணவோ, அதுதான் அங்கு டீ வழங்கும் ஊழியருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு சமநிலையை ஏற்படுத்தியவர். அப்படிப்பட்ட விஜயகாந்த், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு தயாரிப்பாளர் செலவில் சாப்பிட மாட்டேன் என்று மறுத்த ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு படப்பிடிப்பில் நடந்தது இது. மதிய வேளையில் விஜயகாந்தை பார்க்க அவரது நண்பர்கள் ஆறேழு பேர் வந்துள்ளனர். விஜயகாந்த் அவர்களிடம் பேசி சந்தோஷமாக இருந்துள்ளார். அது மதியவேளை என்பதால் விஜயகாந்துடன் அவரது நண்பர்களும் சாப்பிட்டுள்ளனர். நண்பர்கள் சாப்பிட்டுவிட்டு சென்ற பின், அங்கிருந்த சிலருக்கு சாப்பாடு இல்லை.
அதாவது அந்த தயாரிப்பு நிறுவனம், எதையும் கணக்குப்பார்த்து அளவாக செய்யும் நிறுவனம் 60 பேருக்கு உணவு என்றால், அங்கு 60 பேர் மட்டுமே சாப்பிட முடியும். இதனால் விஜயகாந்த் நண்பர்கள் சாப்பிட்டதால், அங்கிருந்த சிலருக்கு சாப்பாடு கிடைக்கவில்லை. இதையறிந்த தயாரிப்பாளர் கோபமாகி, விஜயகாந்த் ஏன் இப்படி நண்பர்களை எல்லாம் அழைத்து வந்து சாப்பிட வைக்கிறார் என திட்டியிருக்கிறார்.
இது விஜயகாந்த் காதுகளுக்கு சென்றுவிட்டது. இதையடுத்து அந்த தயாரிப்பாளரை அழைத்து பேசிய விஜயகாந்த், சாப்பிடும் நேரத்தில் வருபவர்களை பசியோடு திருப்பி அனுப்ப முடியாது. இனிமேல் இந்த படம் முடியும் வரை இங்கு யூனிட்டில் தரும் உணவு எனக்கு வேண்டாம். என் வீட்டில் இருந்து வரவழைத்து சாப்பிட்டுக்கொள்கிறேன் என கூறிவிட்டார். தயாரிப்பாளர் பலமுறை அவரை சமாதானப்படுத்தியும் அவர் அதை ஏற்கவில்லை. அவ்வளவு வைராக்கியம் மிக்கவர் கேப்டன் விஜயகாந்த்.





