நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வருகிற 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கின்றனர். வில்லனாக தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடித்திருக்கிறார்.
மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதுவும் ரஜினிக்கு நண்பராக இந்த படத்தில் சத்யராஜ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன், இந்த படத்தில் சத்யராஜின் மகளாக நடித்துள்ளார்.
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது, இவ்வளவு பெரிய படத்தில் நானும் இருக்கிறேன் என்பது பெரிய சந்தோஷம். லோகேஷ் என்னிடம், ரஜினியுடன் எப்போது கடைசியாக நடிக்கிறீர்கள் என்று கேட்டார். 1986 என்று சொன்னேன். அப்போதுதான் சார் நான் பொறந்தேன் என்று லோகேஷ் சொன்னார்.
எத்தனை வருஷமா நடிக்கிறீங்க என்றும் என்னிடம் கேட்டார். 46 வருஷம் என்று சொன்னேன். என்ன சார் 46 வருஷமா நடிக்கறீங்களா? என்று ஆச்சரியமாக லோகேஷ் என்னிடம் கேட்டார். ஒருத்தர் 50 வருஷமா சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று ரஜினிகாந்த்தை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். ஒரு சூப்பர் நடிகர், சூப்பர் நடிகராக இருந்தால்தான் ஒருத்தர் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும்.
ரஜினி 50 வருஷமா சூப்பர் ஸ்டாராக இருக்கிறதுக்கு காரணம், அவர் சூப்பர் ஆக்டர். 7 படங்களில் நான் அவருக்கு வில்லனாக நடித்திருக்கிறேன். ஒரு படத்திலாவது ஃபிரண்ட் ஆக நடிக்க வேண்டாமா? அதுக்காகத்தான் இந்த படத்தில் நான் நடித்தேன். கவனமா இருக்கும்போது ஸ்டைலா இருக்க முடியும், தூங்கும் போது ஸ்டைலா இருக்க முடியுமா?
தம்பிக்கு எந்த ஊரு படப்பிடிப்பு தளத்தில் ரஜினி தூங்கிக் கொண்டிருந்தார். நான் நிழல்கள் ரவியிடம் கேட்டேன், மச்சான் ஒருத்தன் நின்னா ஸ்டைலா இருக்கலாம், நடந்தா ஸ்டைலா இருக்கலாம். இது என்னடா தூங்கும்போது கூட ஸ்டைலா இருக்கு என்று கேட்டேன். அப்போது தலையில் தலைவைத்து ரஜினி ஸ்டைலாக தூங்கிக் கொண்டிருந்தார் என்று அந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





