நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர். அரசியல் வாழ்வில் 18 ஆண்டுகளாக இருந்தவர். விஜயகாந்த் வளரும் காலகட்டத்தில் பலரும் அவருடன் இணைந்து நடித்தனர். அனைவருமே 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக அந்த காலகட்டத்தில் இருந்ததால், நடிப்பு என்ற தொழில்முறையை கடந்து நண்பர்களாகவும் இருந்தனர்.
அந்த வகையில் இப்ராகிம் ராவுத்தர், திருப்பூர் லிங்க்ஸ் சவுகத் அலி, அக்பர், ராதாரவி, தியாகு, எஸ் எஸ் சந்திரன், ஆர் சுந்தர்ராஜன் என பலரும் விஜயகாந்துக்கு நெருக்கமாக இருந்துள்ளனர். தனிப்பட்ட முறையில் சந்தித்தால் வாடா, போடா என பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்களது நட்பு இருந்தது. விஜி என்றுதான் நெருக்கமானவர்கள் கேப்டனை அழைப்பர்.
கடந்த சில ஆண்டுகளாக மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்தை அவரது வீட்டில் சென்று சந்திக்க பலரும் விரும்பி இருக்கின்றனர். அதற்கான முயற்சியும் செய்துள்ளனர். குறிப்பாக நடிகர் ராதாரவி பலமுறை இதுகுறித்து பிரேமலதா உள்ளிட்டோரிடம் கேட்டிருக்கிறார். எஸ்ஏ சந்திரசேகர் 2 ஆண்டுகளாக கேட்டு இருக்கிறார்.
நடிகர் சூர்யா, விஜய் போன்றவர்களும் விஜயகாந்தை நேரில் ஒருமுறை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க வேண்டும். அவருக்கு ஆறுதலாக பேச வேண்டும். நாளுக்கு நாள் அவர் பலவீனமடைந்து வருவதால், அவரை எப்படியாவது ஒருமுறை சந்தித்து விடுவது பலரும் தீவிரம் காட்டிய நிலையில், பிரேமலதா தரப்பில் இருந்து அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதற்கு பிரேமலதா தரப்பில் சொல்லப்படும் காரணம், விஜயகாந்த் உடல் அளவில் மிகவும் பலவீனமாக இருக்கிறார். வெளிநபர்கள் சந்திக்கும்போது அவர்களது தொற்று மிக எளிதாக விஜயகாந்துக்கு பரவி விடும் வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி விஜயகாந்த் அவரது உடல்நிலைக்கு மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடாது. தனது பழைய நண்பர்களை பார்க்கும்போது தன்நிலை கருதி அதிக உணர்ச்சி வசப்பட்டால் அதுவே அவருக்கு ஆபத்தாகி விடும் என்பதால் அவர் இதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த காரணம் மருத்துவ ரீதியாக, விஜயகாந்த் உடல்நலம் கருதி எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், கடைசி வரை விஜயகாந்தை சந்தித்து பேச முடியாமலேயே போய்விட்டதே என்ற வருத்தமும் வேதனையும்தான் ராதாரவி, விஜய், சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர் போன்றவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பழைய நண்பர்களின் சந்திப்பு கூட விஜயகாந்துக்கு மனதளவில் அதிக உற்சாகத்தை கொடுத்து அவரை சற்று பலப்படுத்தி இருக்கலாம். ஆனால் கடைசி வரை தனது பழைய நண்பர்களை சந்திக்காமலேயே விடைபெற்று சென்றுவிட்டார் கேப்டன் விஜயகாந்த்.





