துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இதனை மகிழ் திருமேனி இயக்குகிறார். முன்தினம் பார்த்தேனே என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தடையற தாக்க படத்தை எடுத்து தான் யார் என்பதை நிரூபித்தார். பிறகு தடம் மீகாமன் உள்ளிட்ட திரைப்படங்கள் மகிழ் திருமேனிக்கு பெயர் பெற்று கொடுத்தன.
க்ரைம் திரில்லர் ஜானலில் படம் எடுப்பதில் வித்தகர் ஆன மகிழ்திருமேனி, இந்த முறையும் அதையையே கையாண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் படத்தில் இருக்கின்றனர். ஆனால் இவர்கள் நடிப்பது குறித்து இதுவரை தயாரிப்பு நிறுவனமான லைக்கா எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
வேதாளம், விவேகம் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது. சூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே கலை இயக்குனர் மிலன் காலமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சூட்டிங்கை தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் ஆன நீரவ் ஷாவும் திடீரென அஜர்பைஜானில் இருந்து கிளம்பினார். அவருக்கு பதில் ஓம் பிரகாஷ் என்பவர் படத்திற்குள் வந்தார். இவர் ஏற்கனவே அஜித்தின் ஆரம்பம் திரைப்படத்தில் பணிபுரிந்தார். இவரை கேமராமேனாக்க அஜித் கூறியதை எடுத்து, படக்குழுவும் சம்மதித்தது. சமீபத்தில் அர்ஜுன் அஜித் ஆரவ் ஆகியோர் இணைந்து உணவகத்தில் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதே போல் படப்பிடிப்பு தளத்திலும்,அதில் இடம்பெற்ற நட்சத்திரங்களை அஜித் புகைப்படம் எடுத்தார். அதுவும் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அஜர்பைஜான் நாட்டிலேயே 90 சதவீத படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் இதன் பணிகள் நிறைவடைந்து விடும் என்று தெரிகிறது. படத்தில் அஜித்குமார் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.





