நடிகர் வடிவேலு, ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி கொண்டாடப்பட்டவர் என்றால் அது மிகையல்ல. 1990களில் அவர் நடிக்காத தமிழ் படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அவரது டைரியில் கால்ஷீட் தேதிகள் அனைத்துமே புல் ஆகியிருந்தன.
இது பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், கோடிகளில் புரள ஆரம்பித்தார் வடிவேலு. பணம் வந்தால் பகட்டும், மமதையும், மற்றவர்களை மதிக்காத ஆணவமும் வந்துவிடும் என்ற பலரை சொல்வார்கள்.அதற்கு வடிவேலுவும் விதிவிலக்கு அல்ல என்பதை அவருடன் பல ஆண்டுகளாக நடித்த சக நடிகர்களும், துணை நடிகர்களும் கண்டுகொண்டனர்.
ஒரு புது தயாரிப்பாளர் படப்பிடிப்பில், வடிவேலுவின் ஒருநாள் சம்பளம் ரூ. 12 லட்சம். அவருடன் அன்று காமெடி சீனில் நடித்த துணை நடிகர்களுக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் தர முன்வந்திருக்கிறார் அந்த தயாரிப்பாளர். இந்த விஷயத்தை அறிந்த வடிவேலு, அந்த தயாரிப்பாளரை தனியாக அழைத்து, மிரட்டி எதுக்காக 20 ஆயிரம் ரூபாய் தர்றே? நாளைக்கு நடிக்கிற எல்லா படத்துக்கும் அவன் அதே சம்பளம் கேட்பான், ஆளுக்கு 1500 ரூபா மட்டும் கொடு, அதுவே போதும் என்று கூறியிருக்கிறார். இதை மறைந்த போண்டாமணி சிலரிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார்.
அப்படிப்பட்ட குணம் கொண்ட வடிவேலுவுக்கு சின்னக்கவுண்டர் படத்தில் தனக்கு குடை பிடிக்கும் கேரக்டர் கொடுத்து, தமிழ் ரசிகர்களுக்கே அறிமுகப்படுத்தியவர் கேப்டன் விஜயகாந்த். அவரது மறைவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் இருந்த வடிவேலுவுக்கு இனி சினிமாவில் அஸ்தமன காலம்தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவில் கலந்துக்கொள்ள வந்த வடிவேலுவை அழைத்துச் செல்ல பேட்டரி கார் வந்திருக்கிறது. விழா மேடைக்கு செல்ல 2 கி.மீ., தூரம் என்பதால் கார் பார்க்கிங்கில் இருந்து பேட்டரி கார்கள் இயக்கப்பட்டுள்ளன. அந்த காரில் வடிவேலு எரிச்சலுடன் அமர்ந்து பயணித்துள்ளார்.
அப்போது நடிகர் ராஜ்கிரணும் அந்த பேட்டரி காரில் பயணித்திருக்கிறார். அவரை கண்டவுடன் பேட்டரி காரை விட்டு இறங்கி தெறித்து ஓடியிருக்கிறார் வடிவேலு. என் ராசாவின் மனசிலே படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து, தனது அலுவலகத்திலேயே தங்கிக்கொள்ள இடமும் கொடுத்து, 3 வேளை சாப்பாடும் ஒரு காலத்தில் போட்ட ராஜ்கிரணை பார்த்ததும் வடிவேலு அங்கிருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார். ஒருவேளை ராஜ்கிரணை பார்த்து பயந்துதான் வடிவேலு ஓடியிருப்பாரோ என பலரும் கலாய்த்து வருகின்றனர்.





