ஒரு சரித்திர நாவலை படமாக்கும்போது அதை எப்படி கையாள வேண்டும், எந்த மாதிரி விஷயங்களை முன்னிறுத்தி தரவேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற தெளிவு இருந்தால் மட்டுமே அந்த படத்தை ஓரளவாவது அந்த நாவலின் பிரதிபலிப்பாக கொண்டு வர ஒரு இயக்குநரால் முடியும். இல்லை என்றால், அது பொன்னியின் செல்வன் போல படம் போல தான் இருக்கும்.
இலக்கிய உலகில் வாசகர்கள் மத்தியில்புகழ்பெற்ற சாகாவரம் பெற்ற கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்டஒரு சரித்திர நாவலை, எப்படி படமாக்க கூடாதோ, அப்படி படமாக உருவாக்கியவர் மணிரத்னம். நாவல்களை இனி படமாக்கும் போது, பொன்னியின் செல்வன் போல, படம் எடுத்து விடாதீர்கள் என்று எதிர்காலத்தில் சொல்லும் அளவுக்கு, சொதப்பிய இயக்குநர்தான் மணிரத்னம்.
அதுவும் முதல் பாகத்தில் இருந்த அபத்தங்களை விட இரண்டாவது பாகத்தில் பல காட்சிகளில் அபத்தங்களுக்கு குறைவே இல்லை. குறிப்பாக கிளைமேக்ஸில் மதுராந்தகனுக்கு பட்டம் சூட்டுவது போல, கதையின் முடிவு மாற்றப்பட்டது மிகப்பெரிய தவறு. அந்த படைப்புக்கு செய்கிற துரோகம். பல சுவாரசியமான விஷயங்களை எல்லாம் கதையில் இருந்து ஒதுக்கி விட்டு, ரசிகர்களை ஏமாற்றிய ஒரு படைப்பாகவே இது இருந்தது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி இளையராஜா, பொன்னியின் செல்வன் நாவலை நானும், பாஸ்கரும், பாரதிராஜாவும் போட்டி போட்டுக்கொண்டு படிப்போம். நான் எத்தனை முறை படித்தேன் என்று கூட தெரியாது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த போது ஒரு பீலிங் கூட வரவில்லை என்ற உண்மையை வெளிப்படையாக கூறினார்.
மிகப்பெரிய உண்மை அதுதான். பொன்னியின் செல்வன் நாவலுக்கும், மணிரத்னம் இயக்கிய படத்தும் பல ஆயிரம் மைல் தூரம் என்றால் அது மிகையல்ல. அதைதான் இப்போது புத்தக கண்காட்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர், இயக்குநர் பொன்வண்ணன் பேசும்போதும் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். ஒரு வாசகனாக, படைப்பாளியாக அந்த படம் தனக்கு தந்த ஏமாற்றத்தை அதில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் பொன்வண்ணன் பேசுகையில், கல்கி பொன்னியின் செல்வன் நாவலை எழுதுவதற்கு முன், அதில் வரும் ஊர்கள், கிராமங்கள், சமவெளிப்பகுதிகள் என எல்லா இடங்களுக்கும் நேரில் சென்று பார்த்து, அந்த ஊர்களை, கிராமங்களை இயற்கையை, மக்கள் வாழ்க்கையை உள்வாங்கி ஆய்வு செய்து நாவலில் அதை எழுதியிருக்கிறார். கற்பனையாக சொல்லப்படும் இடங்களை கூட வரலாற்று ரீதியாக காட்ட வேண்டும் என்று கல்கி போகாத இடங்களே இல்லை.ஆனால் படத்தில் அப்படி எதுவுமே இல்லை. அதுமட்டுமின்றி படத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் அணிந்திருந்த உடைகள், ஆபரணங்கள் எல்லாமே வடநாட்டு ஸ்டைலில்தான் இருந்தன எனவும் கூறியுள்ளார். சோழர் காலத்து கதையை, வடநாட்டு கதையாக மாற்றிய பெருமையும், மணிரத்னத்தையே சேரும் என்பதையும் இதில் அவர் தெளிவுபடுத்தி விட்டார்.





