நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், சிறந்த கலைஞனாக ரசிகர்களிடம் பெயர் பெற்றவர். நடிப்பில் அவரை குறை சொல்லவே முடியாது. கேரக்டர் ரீதியாக அந்த படத்தில் ஏன் அவர் நடித்தார் என்பதுதான் குறையாக இருக்குமே தவிர ஹீரோ, வில்லன் என எதுவாக இருந்தாலும், அவரது தனித்துவத்தை நிச்சயம் நிரூபிப்பார்.
ஆனால் அவருக்கான பாதை இதுவென தெளிவாக இருந்தும் அடிக்கடி தனக்கான பாதையை மாற்றியதால், செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல், இன்னும் நடுவழியிலேயே அவர் தவித்தபடி நின்றிருக்கிறார் என்பதுதான் அவர் சினிமா பயணம் சார்ந்த கசப்பான உண்மை.
ஹீரோ கேரக்டர்களில் தொடர்ந்திருக்கலாம். அல்லது வில்லனாக பயணித்திருக்கலாம். அதையும், இதையும் மாற்றி மாற்றி செய்து, மற்றவர்கள் படங்களில் கேமியோ ரோல் செய்து, தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ளாமல் இப்போது அந்த இடத்தை மீண்டும் பிடிக்க முடியாமல் தவிக்கிறார் விஜய் சேதுபதி.
இப்போது தமிழில் சினிமா வாய்ப்புகளே அவருக்கு இல்லை. காரணம், அவருக்கான கதைகள் இல்லை. அதை உருவாக்க, ஆர்வமான இயக்குநர்களும் இல்லை. விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்க்கு ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யாவை தான் தேடினாரே தவிர, விஜய் சேதுபதியை நாடவில்லை.
தமிழில் வாய்ப்பு வெகுவாக குறைந்ததால் பார்சி என்ற வெப் சீரிஸ் மூலம் இந்திக்குள் நுழைந்தார் விஜய் சேதுபதி. ஒரு நடிகராக, மொழி எதுவாக இருந்தாலும் நடிப்புத்தானே நம் தொழில் என்ற பார்வையில் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்டார். ஜவான் படம் பெரிய சக்சஸ் என்றாலும் அதில் நடித்த நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட யாருக்குமே பாலிவுட் வாய்ப்புகள் கதவை தட்டவில்லை.
இதற்கிடையே அந்தாதூண் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், மெரி கிறிஸ்துமஸ் என்ற பான் இந்தியா படத்தில் கத்ரீனா கைப்புடன் விஜய்சேதுபதி நடித்தார். பெரிய ரிசல்டடை எதிர்பார்த்தார். நேற்று முன்தினம் அயலான், கேப்டன் மில்லர், மிஷன் படங்களோடு ஒன்றாக வெளியானது. விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் படத்தின் முதல் நாள் மொத்த வசூலே 2.5 கோடி ரூபாய்தான். சோண முத்தா, போச்சா என்றபடி நொந்து போயிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தி படவுலகமும் ஆப்பு வெச்சுட்டாங்களே, என்ற மைண்ட் வாய்ஸ்தான் அவருக்கு கேட்கிறதாம்.





