நடிகர் விஜய் ஒரு படத்தில் நடிக்க இப்போது 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவர் அடுத்து அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பரபரப்பும் அதிகரித்து வருகிறது. 2026ல் திமுக, அதிமுக இவரது அரசியல் பிரவேசம் தலைவலியாக மாறப்போகிறது என்று அரசியல் விமர்சகர்கள் இப்போதே பேசத் துவங்கிவிட்டனர்.
இந்த சூழலில் இப்போது இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் அவர் ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மிகவும் சிரமப்பட்டார். இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன், நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய்க்கு பெரிய வரவேற்பும், அங்கீகாரமும் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.
இந்த சூழலில்தான், நடிகர் விஜயகாந்தை அணுகி உதவி கேட்டார் இயக்கு;ர் எஸ்ஏ சந்திரசேகர். அதன்பின்புதான் செந்தூரபாண்டி படத்தில் விஜயுடன் சம்பளமின்றி நடிக்கவும், அவரது நல்ல அறிமுகம் கிடைக்கவும் விஜயகாந்த் முன்வந்தார். அதற்குபின்தான் ரசிகன், தேவா, கோயம்புத்தூர் மாப்ளே போன்ற படங்களில் நடித்த வகையில் விஜய்க்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.
இயக்குநர் எழில் இயக்கத்தில் 1999ல் வெளியான படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த படத்தில் குட்டி என்ற கேரக்டரில் விஜய் நடித்திருப்பார். படத்தின் நாயகியாக சிம்ரன் நடித்திருப்பார். இந்த படம் மெகா ஹிட் படமாக விஜய்க்கு அமைந்தது. இந்த படத்தின் பாடல்களும் பெரிய அளவில் அப்போது டிரண்டிங் ஆயின.
ஆனால் இந்த படத்தில் விஜய் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் வடிவேலுதான். 1995ம் ஆண்டில் வடிவேலுவை படத்தின் இயக்குநர் எழில் அணுகி, கதையை சொல்லி இருக்கிறார். வடிவேலுவுக்கு கதை பிடித்து நடிக்க சம்மதித்து இருக்கிறார். ஆனால் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் யாரும் முன்வராத காரணத்தால் வடிவேலு அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
அதன்பிறகுதான் 1999ல் இதே கதையில், குட்டி என்ற கேரக்டரில் அந்த படத்தில் விஜய் நடித்திருக்கிறார். துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த படம் குறித்து பேசுகையில், இந்த சுவாரசியமான தகவலை சொல்லி இருக்கிறார் அந்த படத்தின் இயக்குநர் எழில்.





