நடிகர் செல்வராகவன், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன். தந்தையை போலவே மகன் செல்வராகவன், தமிழ் சினிமாவுக்கு மிக நல்ல படங்களை, வித்யாசமான கதைக்களங்களில் தந்தவர். செல்வராகவன் படங்கள் என்றாலே, அது ஏதாவது ஒரு விதத்தில் ரசிகர்களை பாதிக்கவே செய்யும். அப்படிப்பட்ட படங்களால் மற்ற இயக்குநர்களிடம் இருந்து வித்யாசப்பட்டவர்.
செல்வராகவன் இயக்கத்தில் 7 ஜி ரெயின்போ காலனி, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, காதல் கொண்டேன், இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களை தந்திருக்கிறார். இதில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, நானே வருவேன் ஆகிய 3 படங்கள் தன் தம்பி தனுஷை நாயகனாக்கி செல்வராகவன் டைரக்ட் செய்திருந்தார்.
அதுதவிர 7 ஜி ரெயின்போ காலனி, மிகப்பெரிய வெற்றிப்படமாக செல்வராகவனுக்கு அமைந்தது. இப்போது இந்த படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இதிலும் முதல் பாகத்தில் நடித்த ரவிகிருஷ்ணா தான் கதாநாயகன். அதே போல் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களையும் 2ம் பாகமாக இயக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் செல்வராகவன், இயக்குநராக மட்டுமின்றி நடிகராவும் சில படங்களில் நடித்தார். இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார். பீஸ்ட், பகாசுரன், மார்க் ஆண்டனி படங்களில் நடித்த செல்வராகவன் இப்போது நடிகர் தனுஷ் எழுதி இயக்கும் ராயன் என்ற தனது 50வது படத்தில், தனது அண்ணன் செல்வராகவனை நடிக்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில் ராயன் படத்தின் கதை செல்வராகவன் எழுதியது என்ற தகவல் பரவிய நிலையில், இதுகுறித்து பதிலளித்த இயக்குநர் செல்வராகவன் தனுஷ் இயக்கும் ராயன் படம் அவனது கனவு படைப்பு. அந்த படத்தின் கதை, இயக்கம் அனைத்துமே அவன்தான். அந்த படத்தில் நான் நடிக்கிறேன், என்று விளக்கமும் அளித்து இருந்தார்.
இதையடுத்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், என் வாழ்க்கையில் இது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. என் இயக்கத்தில் நடிப்பதற்கு நன்றி சார், என தனது அண்ணன் செல்வராகவனுக்கு டிவீட் செய்திருந்தார். ஏனெனில் தனுஷை சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்திய குருவே செல்வராகவன். தனுஷின் இந்த பதிவுக்கு பதிலளித்த செல்வராகவன், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி சார், என தனது தம்பிக்கு பதில் தந்துள்ளார். இது இப்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





