மலையாள சினிமாவையும் தாண்டி தமிழில் அதிகமாக பேசப்பட்டிருக்கும் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளத்தில் சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடந்த ஒரு வாரமாக இணையம் முழுவதும் அந்த திரைப்படத்தை பற்றி தான் பேச்சு அடிபட்டு வருகிறது.
தமிழில் எதிர்பாராத அளவுக்கு இவ்வளவு பெரிய வெற்றியை இந்த திரைப்படம் பெறுவதற்கு ஒரே காரணம், அதில் இடம்பெற்ற குணா திரைப்படத்தின் கண்மணி அன்போடு பாடலும், அந்தப் பாடல் இடம் பெற்ற காட்சிகளும் தான். 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மலையாளத்திற்கு ஏற்றவாறு இதன் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், தமிழில் இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. குறிப்பாக இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கொடைக்கானலில் நடைபெறுவதும், அதில் கிட்டத்தட்ட பெரும்பாலான வசனங்கள் தமிழில் இடம் பெற்று இருப்பதும் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் இறுதி காட்சியில் கண்மணி அன்போடு பாடல் இடம் பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுகின்றனர். கடந்த மூன்று நாட்களாக மலையாளத்தையும் தாண்டி தமிழில் இந்த திரைப்படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரே நாளில் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் அந்த திரைப்படம் தமிழில் வசூல் செய்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் கூடுதல் திரையரங்குகளில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் ரிலீஸ் ஆகி உள்ளது.
இந்த திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அந்தப் படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களை சந்தித்து வருகின்றனர். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் உள்ளிட்டோரிடம் நேரில் சந்தித்து அவர்கள் வாழ்த்துக்களை பெற்றுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க, சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரத்திடம் அட்வான்ஸ் தொகை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரமும் தனுசும் இணையும் திரைப்படத்திற்கு தான் இந்த தொகை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் மூவரும் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தனுசை சிதம்பரம் சந்தித்திருப்பதால் இது உண்மைதான் என்று கோலிவுட் வட்டாரமும் பேசி வருகிறது.




