தீபாவளி, காதல், வின்னர் போன்ற சில படங்களில் பத்தோடு பதினொன்றாக ஓரிரு காட்சிகளில், ஒரு சில வசனங்கள் பேசி நடித்திருப்பார் நடிகர் சூரி. அப்போது அவர்தான் சூரி என்பது பலருக்கும் தெரியாது. இப்போது அந்த படங்களை பார்க்க நேர்ந்தால், அந்த குரலும் அவரது முகமும் பார்க்கும் ரசிகர்கள், அட இது நடிகர் சூரிதானே, என ஆச்சரியப்பட்டு விடுகின்றனர்.
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார் சூரி. இதில் 50 பரோட்டா சாப்பிடும் போட்டி காமெடியில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த படங்களில், அவருடன் காமெடி ரோலில் நடித்தார். இதில் சிவகார்த்திகேயன் படமும் வெற்றி பெற்றது. சூரியின் காமெடி நடிப்புக்கும் ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைந்தன. அதே போல் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷால் நடித்த மருது, விஜய் நடித்த ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் சூரி காமெடி நடிப்பு ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சூரியை, காமெடி நடிகர் அந்தஸ்தில் இருந்து ஹீரோ நடிகராக உயர்த்தினார் இயக்குநர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் விடுதலை படத்தில் குமரேசன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் பக்குவப்பட்ட நடிப்பை தந்திருந்தார் சூரி. இதில் வாத்தியார் என்ற கேரக்டரில் தீவிரவாதியாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த படத்தின் 2ம் பாகம் இன்னும் ஆறு மாதங்களுக்கு பின் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.
விடுதலை 2 படத்தில் நடித்து முடித்த பின், துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்த படம் கருடன். இந்த படத்திலும் நடித்து முடித்த பின் கொட்டுக்காளி என்ற படத்திலும் நடித்துள்ள நடிகர் சூரிக்கு இன்னும் சில படங்கள் கதாநாயகனாக நடிக்க கமிட் ஆகி கைவசம் வைத்துள்ளார். விடுதலை 2 படம் இப்போதைக்கு வெளியாகாத நிலையில், கருடன் படத்தின் ரிலீஸ்சும் தள்ளிப் போயுள்ளது.
கருடன் படம் வருகிற 29ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருந்தது. ஆனால் இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் இன்னும் விற்பனையாகவில்லை. இந்த படம் ரூ. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், ஓடிடி உரிமம் மூலம் வருவாய் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகவும் முக்கியம். ஹாட் ஸ்டார் ஏற்கனவே படத்துக்காக ஓடிடி உரிமம் வாங்கிக்கொள்வதாக உறுதியளித்திருந்த நிலையில், ஜியோவுடன் இணைவதால் இப்போது படத்துக்கு உரிமம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் உரிமம் விற்ற பிறகே படம் ரிலீஸ் என்ற முடிவுக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் வந்துள்ளது.





