அரவிந்த்சாமி நடிக்க வந்த புதிதில் அன்றைய இளம் பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வந்தவர். “தளபதி” திரைப்படத்தில் முக்கியமான ரோலில் அறிமுகமான அரவிந்த்சாமி, அதன் பின் “ரோஜா”, “பாம்பே”, “மின்சார கனவு” போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்தார்.

நடுவில் வெகு காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி, 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதனை தொடர்ந்து “தனி ஒருவன்” திரைப்படத்தில் சித்தார்த் அபிமன்யுவாக வந்து பார்வையாளர்களை அசர வைத்தார். தற்போது தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி.
இந்த நிலையில் ஆணழகனாக இளம் பெண்களின் தூக்கத்தை கெடுத்த அரவிந்த்சாமியுடன் ஒரு நடிகை கதாநாயகியாக நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பம்பாய்”. இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

“பம்பாய்” திரைப்படத்தில் முதலில் மனிஷா கொய்ராலாவை ஒப்பந்தம் செய்தபோது, அவர் அத்திரைப்படத்தின் கதையை கேட்டு நடிக்க மாட்டேன் என கூறினாராம். அத்திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆக நடிக்க வேண்டியதாக இருந்ததால் “பம்பாய்” பட வாய்ப்பை மறுத்துவிட்டு அவரது சொந்த ஊருக்கே திரும்பிவிட்டாராம். அதன் பின் மனிஷா கொய்ராலாவின் தோழிகளிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்தாராம் மணிரத்னம். அதன் பிறகுதான் “பம்பாய்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார் மனிஷா கொய்ராலா.





