நடிகர் விஜய் இப்போது, தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இப்போது நடித்து வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை தொடர்ந்து இன்னும் ஒரே ஒரு படத்தில் கடைசியாக நடிக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்துக்கு பிறகு முழுநேர அரசியல்வாதியாக, தமிழக மக்களுக்காக பாடுபட திட்டமிட்டுளளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து, பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பொதுவாக நடுநிலையான மக்கள் தரப்பில் இருந்து வரும் கருத்துகள் என்பது தொடர்ந்து பல ஆண்டுகளாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தும், தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மிகப்பெரிய மாற்றத்தை முன்னேற்றத்தை சந்திக்கவில்லை.
அந்த நிலையில்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை துவக்கிய விஜயகாந்துக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இல்லாமல் போய்விட்டார். அதனால் தமிழக அரசியலில் புது ரத்தம் பாய்ச்சும் விதமாக வந்துள்ள நடிகர் விஜயை வரவேற்போம் என்றுதான் கூறி வருகின்றனர்.
அதே போல் சினிமா நடிகர் என்ற விமர்சனத்தை முன்னிறுத்த அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுமே தகுதியற்றவர்கள். ஏனெனில் கருணாநிதி, உதயநிதி என அவர்கள் குடும்பமே சினிமா சார்ந்தவர்கள்தான். எம்ஜிஆர், ஜெயலலிதாவும் சினிமாவில் இருந்துதான் அரசியலுக்கு வந்தவர்கள் என்றும் குறிப்பிட்டு பேசுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி கூறுகையில், நடிகர் விஜய், சினிமாவில் மார்க்கெட் இழந்து அரசியலுக்கு வரவில்லை. அவருக்காக, 10 பேர் அல்ல 100 பேர் தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். சினிமாவில் பெரிய நடிகராக இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் ஒதுக்கி விட்டு, அரசியலுக்கு வருகிறார்.
அவர் திருடுவதற்காக அரசியலுக்கு வரவில்லை. ஏனென்றால் அவரே நிறைய சம்பாதித்து வைத்திருக்கிறார். அவரிடம் தேவைக்கான பணம் இருக்கிறது. இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார். அதற்கே ஒரு துணிச்சலான தைரியம் வேண்டும். அதற்காக அவருக்கு ஒரு சல்யூட் என்று அந்த நேர்காணலில் சமுத்திரக்கனி கூறியிருக்கிறார்.





