தமிழ் சினிமா மட்டுமல்ல இந்தி சினிமாவிலும் டான்ஸ் மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரபுதேவா. அவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் பாலிவுட் உலகில் உள்ளது. நடிகர், டான்ஸ் மாஸ்டர் என கலக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவா, போக்கிரி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற, அதனைத் தொடர்ந்து வில்லு, வெடி ஆகிய திரைப்படங்களை இயக்கினார். ஆனால் இந்த இரு திரைப்படங்களும் படு தோல்வியை சந்தித்தன. இதன் பிறகு முழுக்க முழுக்க நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் பிரபுதேவா.
ஆனால் இது அவருக்கு கொஞ்சம் கூட கை கொடுக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் எத்தனை திரைப்படங்கள் நடித்தார் என்பதே இங்கு பலருக்கும் தெரியாது. அதற்குக் காரணம் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் வந்த வேகத்தில் தூக்கப்பட்டதுதான்.
பிரபுதேவா நடிப்பில் கடைசியாக பகிரா எனும் திரைப்படம் வெளியானது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இவர் தற்போது அஜித்தை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படியான சூழலில் பிரபு தேவாவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதில் முக்கால பாடலில் இருக்கும் கெட்டப்பில் பிரபு தேவாவின் போஸ்டர் வைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவும் ஏ ஆர் ரகுமானும் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1990களில் காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ், மின்சார கனவு ஆகிய திரைப்படங்கள் பிரபுதேவா ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் வெளியானது.
இப்படியான சூழலில் தான் இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யோகி பாபு நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல youtube நிறுவனமான பிஹைண்ட்வுட்ஸ் இதனை தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





