நடிகை மீனா, பார்த்தவுடன் மனசுக்கு பிடித்துப் போகும் பேரழகியான நடிகை. தமிழில் என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் நடிகர் ராஜ்கிரண் ஜோடியாக அறிமுகமானார். அதுவரை படங்களை தயாரித்துக்கொண்டு இருந்த தயாரிப்பாளர் ராஜ்கிரண், இந்த படத்தில்தான் கதாநாயகனாக மாறினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மீனாவின் அழகும் நடிப்பும் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது. அடுத்து ஆர்வி உதயகுமார் டைரக்ஷனில் ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் முன்னணி நாயகர்களாக ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், முரளி, சரத்குமார், பிரபுதேவா போன்றவர்களுடன் நிறைய படங்களில் நடித்தார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களிலும் மீனா நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகையானார். வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்த மீனாவுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக விஜயுடன் தெறி படத்திலும், அரவிந்த் சாமியுடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
கடந்த 2022ம் ஆண்டில் நடிகை மீனாவின் வாழ்வில் மிகப்பெரிய சோகம் நிகழ்ந்தது. மீனாவின் கணவர் வித்யாசாகர், நுரையீரல் தொற்றால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது தமிழ் சினிமா துறையினரை கலங்கடித்தது. தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் நடிக்காமல் இருந்த மீனா, அந்த துயரத்தில் இருந்து வெளிவந்து சமீபமாக சில படங்களில் நடித்து வருகிறார். மகள் நைனிகா படிப்பில் கவனம் செலுத்தட்டும் என, மீனா அவரை நடிக்க மீண்டும் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் நடிகை மீனா மறுமணம் குறித்த தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. சில நடிகர்களுடன் இணைத்து அவர் இவரை தான் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்றும் கிளப்பி விடுகின்றனர். ஆனால் மறுமணம் குறித்த எண்ணமே இல்லை என்று மீனா அழுத்தம் திருத்தமாக ஏற்கனவே கூறிவிட்டார். சினிமா நடிப்பு, என் மகள் வாழ்க்கை இந்த இரண்டு மட்டுமே எனக்கு முக்கியம் என்று கூறியிருக்கிறார்.
இந்த சூழலில், கேரளாவில் சர்ச்சைக்குரிய யூடியூப்பராக இருந்து பரபரப்பான விஷயங்களை பேசி வரும் யூடியூப்பர் அப்துல் வர்கீஸ், நான் மீனாவை திருமணம் செய்துக்கொள்கிறேன். மகள் இருந்தாலும் பரவாயில்லை. மீனாவை திருமணம் செய்ய நான் தயார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவர் ஏற்கனவே கமல் மகள் அக்ஷரா ஹாசனையும், மலையாள நடிகை நித்யா மேனனையும் திருமணம் செய்துக்கொள்வதாக இதேபோல் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





