தமிழ் சினிமாவில் நடிகர்கள் கவுண்டமணி – செந்தி்ல் ஜோடியை பொருத்தவரை எப்போதுமே சக்சஸ் கூட்டணிதான். கடந்த 1980 – 90களில் கவுண்டமணி செந்தில் நடித்திருந்தாலே அந்த படம் ஹிட்தான். அவர்களின் காமெடிக்காகவே படம் ஓடிவிடும். அதுவும் கிராமப்பபுற கதைகள் என்றால் இருவருக்குமே அல்வா சாப்பிடுவது போல அசத்தி விடுவர். கரகாட்டக்காரன் படத்தின் வெற்றியில் 50 சதவீத பங்கு இவர்களுடையதுதான்.
முனுசாமி என பெயர் கொண்ட செந்தில் குடும்பத்துக்கே மளிகைக்கடைக்காரர் குடும்பம் என்றுதான் பெயர். பரம்பரை பரம்பரையாக மளிகை கடை நடத்தியவர்கள். முதுகுளத்தூரை சேர்ந்த செந்தில், சிறுவயதிலேயே வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்தவர். முனுசாமிதான் அவரது நிஜப் பெயர். டாஸ்மாக் கடையில், துணிக்கடையில் வேலை பார்த்த அவரை சினிமாவுக்குள் கொண்டு வந்ததே கவுண்டமணிதான்.
கவுண்டமணி நடிக்க வருவதற்கு முன், நிறைய நாடகங்களில் நடித்தவர். நாடக மேடையில் திரைச்சீலை தூக்க ஆளில்லை என, துணிக்கடையில் வேலை பார்த்த செந்திலை அழைத்துச் சென்றார். அப்போது நாடகத்தில் நடிக்க வேண்டிய துணை நடிகர் ஒருவர் வராததால், அந்த கேரக்டரில் செந்திலை நடிக்க வைத்தனர்.பின்னர் அவரது நடிப்பு பலருக்கும் பிடித்துப் போக சினிமாவில் அவரை பொய்சாட்சி படத்தில் நடிக்க வைத்தவர் நடிகர் கே பாக்யராஜ்.
அதன்பின், ஒரு கட்டத்தில் கவுண்டமணி – செந்தில் ஜோடியாக நடித்த சில காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற பல படங்களில் அந்த காமெடி ஜோடி பட்டையை கிளப்பியது. ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் கவுண்டமணி செந்தில் காமெடி காம்பினேஷன் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. அவர்களது காமெடிக்காகவே பல நாட்கள் ஓடிய படங்கள் அதிகம். ஏ சென்டர்களை காட்டிலும் பி மற்றும் சி சென்டர்களில் இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை தந்தனர்.
இந்நிலையில் ஒரு கட்டத்தில், நடிகர் செந்திலை சிலர் தவறாக வழிநடத்தினர். கவுண்டமணிக்கு தனியாக பெரிய வரவேற்பு கிடையாது. உங்களுடன் இணைந்து நடிப்பதால்தான் அவரது காமெடி ஜெயிக்கிறது என்று கூறி, கொம்பு சீவி விட்டனர். இதை மனதுக்குள் வைக்காமல் கவுண்டமணியிடமே நேரில் சென்று செந்தில் யதார்த்தமாக கூறிவிட்டார். இதனால் கடுப்பான கவுண்டமணி, அப்படியாப்பா, சரி அப்ப நீ இனிமே தனியா பண்ணு என்று அவரை அனுப்பி விட்டார்.
அதன்பிறகு நடித்த படங்களில் கவுண்டமணி, ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து தூள் கிளப்பினார். கார்த்திக், பார்த்திப0ன், ராம்கி போன்றவர்களுடன் இரட்டை நாயகனாக நடித்தார். காமெடியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஆனால் செந்தில் தனியாக காமெடி செய்த படங்கள் எதுவுமே எடுபடவில்லை. தன் தவறை உணர்ந்த செந்தில், அண்ணே தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சிடுங்க என்று மீண்டும் கவுண்டமணியை தஞ்சமடைந்தார். தன் சிஷ்யனை மன்னித்த கவுண்டமணி, மீண்டும் செந்திலுடன் கூட்டணி அமைத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து அசத்தினார்.





