நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார். 73 வயதிலும் இப்போதும் கதாநாயகனாக மாஸ் காட்டி நடிக்கும் 23 வயது இளைஞர். அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவர் ஏமாற்றியதை எல்லாம் மறந்துவிட்டு, இப்போதும் அவரை ரசிகர்கள் தலைவா, தலைவா என கொண்டாடி வருகின்றனர். தமிழக மக்களுக்கு என ரஜினி இதுவரை எதுவும் செய்தது இல்லை. ஆனால் ரஜினிதான் உலகம் என வாழும் ரசிகர்களும் நிறைய இருக்கவே செய்கின்றனர்.
நடிகர் கமல்ஹாசன், இந்திய சினிமாவிலேயே உலக நாயகன் என புகழும் அளவுக்கு தன்னிகரற்ற ஒரு சிறந்த கலைஞன் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மீது குறைகளும், விமர்சனங்களும் இருந்தாலும் ஒரு திரைக்கலைஞனாக அவரது சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். தசாவதாரம், அன்பே சிவம், குணா போன்ற சில படங்களை அவரது சாதனைகளுக்கு ஒரு சோறு பதம் போல சொல்லி விடலாம்.
ஆனால் அப்படிப்பட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்க பயப்பட்ட ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அவர்தான் காமெடி நாயகன் கவுண்டமணி. இது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. கவுண்டமணி தங்களது படங்களில் நடிக்கிறார் என்றாலே, ரஜினி கமல் இருவருமே சற்று சீரியஸாகி விட்டு, பிறகுதான் நார்மல் ஆவார்கள் என்று அருகில் இருப்பவர்களே பார்த்து இருக்கின்றனர். ஏனெனில் கவுண்டமணியின் தாக்கம் அவர்களுக்கு ஏற்கனவே பலமுறை தெரிந்திருக்கிறது.
அதாவது கவுண்டமணியை பொருத்தவரை எல்லோருமே நடிகர்கள்தான். இதில் ஏற்றத்தாழ்வு இல்லை. சூப்பர் ஸ்டார், உலக நாயகன் பட்டங்கள் எல்லாம் ரசிகர்களாக விரும்பி கொடுத்த பட்டம்தான். செந்திலும் நடிகர்தான். நானும் நடிகர்தான். ரஜினி, கமலும் நடிகர்தான். அதனால் பெரிய நடிகர்கள் என்ற போலி மரியாதை, போலியான பணிவு இதெல்லாம் காட்ட மாட்டார் கவுண்டமணி.
பல ஆண்டுகளுக்கு முன் பேர் சொல்லும் பிள்ளை என்ற படத்தில் கமல் நடித்த போது, படப்பிடிப்பு துவங்கும் முன், அந்த படத்தின் டைரக்டரை அழைத்து கமல் பேசியிருக்கிறார். இதில் கவுண்டமணி நடிக்கிறார். அவருக்கு காமெடியுடன் வில்லத்தனமான கேரக்டரையும் சேர்த்து கொடுங்கள். அப்போதுதான் ஹீரோ பற்றி அதிகமாக கமெண்ட் அடிக்க மாட்டார் என்று கூறியிருக்கிறார். ஆனால் அப்படி இருந்தும் இந்தியன் படத்தில், சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே, என கமலை கலாய்த்திருப்பார் கவுண்டமணி.
அதே போல் எஜமான் படத்தில் நடித்த போது, கவுண்டமணி என்னை மட்டம் தட்டி பேசற மாதிரி சீன் எதுவும் வெச்சுடாதீங்க என்று டைரக்டரிடம் எச்சரித்த பிறகுதான் ரஜினியே நடிக்கவே வந்திருக்கிறார். அப்படி இருந்தும் பாபா படத்தில் ரஜினியை பல இடங்களில் நக்கல் செய்திருப்பார் கவுண்டமணி. ஏனெனில் கவுண்டமணி ரஜினி, கமலை எல்லாம் என்னப்பா எப்படி இருக்கறே என்று கேட்கிற டைப்தான். அதனால் எங்கே கிண்டலடித்து நமது இமேஜை டேமேஜ் செய்து விடுவாரோ என ரஜினி, கமல் இருவருமே நடிக்க பயந்தது நடிகர் கவுண்டமணிக்குதான்.





