கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் புஷ்பா. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா போட்ட குத்தாட்டம் பட்டி தொட்டி எங்கும் புஷ்பா பெயரை சொல்ல வைத்தது.
செம்மர கட்டைகளை கடத்தும் கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில், லோக்கல் ரவுடியாக தன்னை காட்டிக்கொள்ளும் அல்லு அர்ஜூன் ஒரு கட்டத்தில் வில்லன் குரூப்பில் சேர்ந்து பெரிய கடத்தல் தலைவனாக மாறுவதுதான் இந்த படத்தின் கதை. இடையில் காதல், அம்மா சென்டிமென்ட், ஆக்ஷன், வீரம் என புஷ்பா முதல் பாகம் செம மாஸ் ஆக இருந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில், ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்த படம் திரைக்கு வருவதாக, படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது.
புஷ்பா முதல் பாகத்தில் புஷ்பராஜாக நடித்த அல்லு அர்ஜூன், அவரது மனைவியாக ராஷ்மிகா மந்தானா, ஹீரோவின் நண்பராக வரும் ஜெகதீஷ், போலீஸ் அதிகாரியான பகத் பாசில் போன்றோர் இந்த படத்தில் தொடர்ந்து அதே கேரக்டர்களில் நடித்துள்ளனர். சமந்தாவுக்கு பதில் புஷ்பா 2ம் பாகத்தில், பிரியாமணி அயிட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஏப்ரல் 8ம் தேதி, அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் பெண் வேடத்தில் புடவை கட்டியபடி, காலில் பெரிய கொலுசுகள் போட்டபடி அல்லு அர்ஜூன் ஒரு பக்க தோள்பட்டையை தூக்கியபடி நடந்து வருகிறார். சிலரை அடித்து துவம்சம் செய்கிறார்.
மற்றபடி இந்த டீசரில் வசனங்களோ, வேறு காட்சிகளோ எதுவும் இல்லை. இப்படி ஒரு மொக்கையான டீசரை பார்த்து நொந்து போன ரசிகர்கள், என்னய்யா இது, காஞ்சனா படத்துல சரத்குமார், ராகவா லாரன்ஸ் நடந்து வந்த மாதிரி, அல்லு அர்ஜூனை காட்டியிருக்காங்க. புஷ்பா 2ம் பாகம் தேறுமா, என்று சந்தேகமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.





