நடிகர் விஜய், சினிமாவில் காதல் நாயகனாக துவக்கத்தில் நடித்து பிறகு படிப்படியாக வளர்ந்து மக்கள் கவர்ந்த நாயகனாக மாறி, ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அதிரடியாக இறங்கி, தமிழ் சினிமாவில் ஒரு பிரளயத்தையே நிகழ்த்தி காட்டியவர். இப்போது தமிழ் நடிகர்களில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்குவது நடிகர் விஜய் மட்டுமே.
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என, ஏற்கனவே ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் இருக்கும் போதே பஞ்சாயத்தை கிளப்பி விட்டனர். ரஜினியும் காக்கா கழுகு கதை சொல்ல வேண்டிய நிலைக்கும் வந்துவிட்டார். பிறகு விஜய், சூப்பர் ஸ்டாருன்னா அவர் மட்டும்தான். நான் தளபதியா மட்டுமே இருந்துக்கிறேன் என்றும் ரசிகர்களை சமாதானம் செய்தார்.
இதற்கிடையே கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய விஜய், இப்போது நடித்து வரும் கோட் மற்றும் மற்றொரு படம் என 69 படங்களுடன் தன் திரையுலக பயணத்தை நிறைவு செய்வதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். வருகிற ஜூன் 22ம் தேதி, அவரது பிறந்த நாளன்று விஜய் 69 படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.
நடிகர் விஜயை பொருத்த வரை, அரசியல் கட்சியை துவங்குவதற்கு முன்பே மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக பல நலத்திட்ட உதவிகளை தனது ரசிகர்கள் மூலம் செய்ய ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவியரை சென்னைக்கு வரவழைத்து, முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவ, மாணவியருக்கு பரிசு தொகைகளை அள்ளி அள்ளி கொடுத்தார்.
அத்துடன் 10ம் வகுப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியை நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் யாரும் கண்டுக்கொள்ளாத நிலையில், அவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற வாழ்த்தினார் விஜய், அதே போல் இப்போதும் அரசியல் கட்சிகள் தேர்தலில் பிஸியாக உள்ள சூழலில், ரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு, டிவிகே தலைவர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் பக்கத்தில் அதன் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோண்பிருந்து அன்பு, கருணை, ஈகை, சகோரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக் கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன், என்று அதில் விஜய் கூறியிருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து இஸ்லாமிய மக்களும் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.





