தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சங்கர். பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இவர் இயக்கிய வெற்றி திரைப்படங்கள் ஏராளம். ஜென்டில்மேன் திரைப்படத்தில் தொடங்கி கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த 2.ஓ திரைப்படம் வரை சங்கரின் வெற்றி பயணம் தொடர்கிறது.
தற்போது இவர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார். அதற்கான காட்சிகள் அதிகம் இருந்ததாலும் கதையின் ஆழத்தை புரிந்தும் அவர் படத்தை மூன்றாம் பாகமாகவும் எடுத்துள்ளார். இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் சங்கரின் குடும்ப வாழ்க்கையை பார்க்கும் பொழுது அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகளான அதிதி, விருமன் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து மாவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவருக்கு அர்ஜித் என்ற மகனும் இருக்கிறார். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு, இன்று பெற்றோர் முன்னிலையில் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. தருண் கார்த்திகேயன் என்பவரை தற்போது கரம்பிடித்து இருக்கிறார் ஐஸ்வர்யா சங்கர். இவர்களின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், இயக்குனர் மணிரத்னம் திரைத் துறையைச் சேர்ந்த ஏராளமான முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் மு க ஸ்டாலினும் சங்கர் மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஐஸ்வர்யா சங்கருக்கு இது இரண்டாவது திருமணம். முதலாவதாக அவர் கிரிக்கெட் வீரர் தாமோதரனை திருமணம் செய்தார். புதுச்சேரி கிரிக்கெட் அணியில் இருந்த அவர் மீது போஸ்கோ குற்றச்சாட்டில் இருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து தனது மூத்த மகளுக்கு வரன் தேடி வந்த சங்கர், தற்போது தருண் கார்த்திகேயன் என்பவரை தனது மாப்பிள்ளை ஆக்கியுள்ளார்.





